விழுப்புரத்தில் மனைவி கொலையில் தலைமை ஆசிரியர் கைதான வழக்கில் திடீர் திருப்பம்
விழுப்புரத்தில் மனைவி கொலையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கைதான சம்பவத்தில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலையை செய்ததாக உண்மையான குற்றவாளிகள் 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
விழுப்புரம், மே.8-
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரில் சுதாகர் நகர் பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 60), ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருக்கு 2 மனைவிகள், முதல் மனைவி இந்திரா (56), 2-வது மனைவி லீலா. நடராஜனின் முதல் மனைவி இந்திரா விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ந் தேதி அதிகாலையில் இந்திரா அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர். இந்திராவுக்கு தெரியாமல் நடராஜன், லீலாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டதும், அதன் பின்னர் இந்த விஷயம் இந்திராவுக்கு தெரியவந்ததும் அவர் நடராஜனிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், இந்திரா உயிரோடு இருந்தால் லீலாவுடன் நிம்மதியாக வாழ முடியாது என்று கருதி இந்திராவை கொலை செய்ததாக நடராஜன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக கூறி அதுசம்பந்தமான குற்றப்பத்திரிகையை போலீசார், விழுப்புரம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் கைதான நடராஜன் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். அவர், இவ்வழக்கில் உண்மைக்கு புறம்பாக தன்னை கைது செய்துள்ளதாகவும், இதுசம்பந்தமாக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திடீர் திருப்பம்
இந்த நிலையில் இந்திரா கொலை வழக்கில் அவரது கணவர் நடராஜன் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கத்தை சேர்ந்தவ விஸ்வநாதன், வேலாயுதம் ஆகியோர் இந்திராவை கொலை செய்து அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் வேறொரு வழக்கில் பண்ருட்டி போலீசாரிடம் சிக்கியபோது, இந்திராவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
மேல்விசாரணை
இந்த தகவல் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இவ்வழக்கை மீண்டும் மேல் விசாரணை செய்யும்படி விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் இவ்வழக்கில் மேல்விசாரணை செய்ய தன்னை விசாரணை அதிகாரியாக நியமிக்கக்கோரி விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம் மனுதாக்கல் செய்துள்ளார்.
காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவத்திடம் கேட்டபோது அவர் கூறுகையில், இவ்வழக்கில் மேல் விசாரணை செய்ய விசாரணை அதிகாரியாக தன்னை நியமித்து கோர்ட்டில் இருந்து உத்தரவு வரப்பெற்றதும் மறு விசாரணை தொடங்கப்படும். இதற்காக கடலூர் சிறையில் இருக்கும் விஸ்வநாதன், வேலாயுதம் ஆகிய இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.
பெண் கொலை வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு திடீர் திருப்பமாக உண்மை குற்றவாளிகள் 2 பேர் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story