12 மணிக்குள் பொருட்கள் வாங்க காந்திமார்க்கெட் பகுதியில் அலைமோதிய பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் வாகனஓட்டிகள் அவதி


12 மணிக்குள் பொருட்கள் வாங்க காந்திமார்க்கெட் பகுதியில் அலைமோதிய பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலால் வாகனஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 7 May 2021 8:43 PM GMT (Updated: 2021-05-08T02:13:59+05:30)

திருச்சியில் பகல் 12 மணிக்குள் பொருட்கள் வாங்குவதற்காக காந்திமார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதினர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்சி, 
திருச்சியில் பகல் 12 மணிக்குள் பொருட்கள் வாங்குவதற்காக காந்திமார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதினர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதிய கட்டுப்பாடுகள்
கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் நேற்று முன்தினம் அமலுக்கு வந்தது. இதன்காரணமாக மளிகை, காய்கறி கடைகள் நேற்றும் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட்டன. பாலகம், மருந்தகங்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
நேற்று பகல் 12 மணிக்கு பிறகு காய்கறிகள் மற்றும் மளிகை கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் திருச்சி காந்திமார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. 
போக்குவரத்து நெரிசல்
குறிப்பாக காய்கறி கடைகள் மூடப்படும் நேரமான பகல் 12 மணிக்கு சிறிதுநேரம் முன்னதாக காந்திமார்க்கெட் பகுதியில் ஆட்டோ, கார், லாரி என ஏராளமான வாகனங்கள் ஒரே இடத்தில் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காந்திமார்க்கெட்டை சுற்றியுள்ள வெல்லமண்டி சாலை, தர்பார்மேடு, தஞ்சைசாலை, நெல்பேட்டை என அனைத்து பகுதியிலும் வாகனங்கள் சாலையை கடந்து செல்ல முடியாமல் நாலாபுறமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறின.
இதற்கிடையே பகல் 12 மணிக்கு காந்திமார்க்கெட்டின் நுழைவுவாசல் மூடப்பட்டது. இதனால் காந்திமார்க்கெட்டுக்குள் செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. ஒரு சிலர் காய்கறிகள் வாங்குவதற்காக பகல் 12 மணிக்கு பிறகும், நுழைவுவாசல் கதவில் ஏறிக்குதித்து உள்ளே சென்றனர். 
இதேபோல் மார்க்கெட்டினுள் பொருட்கள் வாங்கிவெளியே வர முடியாததால் ஒரு சிலர் கேட்டை ஏறி குதித்து வெளியே வந்தனர். பின்னர் 12 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதும், அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

Next Story