காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே வரவேண்டும்: வைரஸ் தொற்று முற்றிய நிலையில் வருவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது - ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலெக்டர் தகவல்


காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே வரவேண்டும்: வைரஸ் தொற்று முற்றிய நிலையில் வருவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது - ஊராட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 May 2021 1:35 PM GMT (Updated: 9 May 2021 1:35 PM GMT)

காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும். வைரஸ் தொற்று முற்றிய நிலையில் வருவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது என ஊராட்சி தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தபணிகளுக்கு ஊராட்சி அளவில் ஊராட்சிமன்ற தலைவர்கள் மிகுந்த ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது 1,328 நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 847 பேர் அவர்களது சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 75,473 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் ராமேசுவரம் நகராட்சிகள், மண்டபம் மற்றும் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகஅளவில் உள்ளது. அதன்படி, இப்பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

ஊரக பகுதிகளில் தனிநபர் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் உடனடியாக அப்பகுதி சுகாதாரத்துறை அலுவலர்களிடம் தகவல் தெரிவித்திட வேண்டும். வைரஸ் தொற்று ஏற்படுபவர்கள் அறிகுறியின் ஆரம்ப நிலையிலேயே உரிய மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறுவதன் மூலம் விரைவில் குணமடையலாம். ஆனால் சிலர் அறியாமையினாலோ அல்லது அலட்சியப் போக்கு காரணமாகவோ வைரஸ் தொற்று முற்றிய நிலையில் மருத்துவமனை வரும் சூழ்நிலையில் உயிரிழப்பு ஏற்படுகிறது.

ஊராட்சி மன்றத் தலைவர்கள் தங்களது ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் இடங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் அமைத்து கண்காணித்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். அதேநேரத்தில், கட்டுப்பாட்டு பகுதியில் இருப்போருக்காக அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி அவர்களது வீடுகளுக்கே கிடைத்திடும் வகையில் உறுதி செய்ய வேண்டும். ஊரக பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே எடுத்துரைத்து தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.

கூடுதல் விவரங்கள், உதவிக்கு கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்தை 04567-1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், மகளிர் திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிகுமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story