தஞ்சை பெரியகோவில் நந்திக்கு 54 குடங்கள் நீரால் அபிஷேகம்


தஞ்சை பெரியகோவில் நந்திக்கு 54 குடங்கள் நீரால் அபிஷேகம்
x
தினத்தந்தி 9 May 2021 7:57 PM GMT (Updated: 9 May 2021 7:57 PM GMT)

கொரோனா ஒழிய வேண்டி தஞ்சை பெரியகோவில் நந்திக்கு 54 குடங்கள் நீரால் அபிஷேகம் பக்தர்கள் இன்றி நடந்தது.

தஞ்சாவூர்:
கொரோனா ஒழிய வேண்டி தஞ்சை பெரியகோவில் நந்திக்கு 54 குடங்கள் நீரால் அபிஷேகம் பக்தர்கள் இன்றி நடந்தது. 
பெரியகோவில் 
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தஞ்சை பெரியகோவிலில் பிரதோ‌‌ஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். இந்தநிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த மாதம் 16-ந் தேதி தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டது. இருப்பினும், வழக்கம் போல் நான்கு கால பூஜையும், பிரதோ‌‌ஷ வழிபாடும் பக்தர்கள் இன்றி நடந்து வருகிறது.
பிரதோ‌‌ஷ தினமான நேற்று நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், தயிர், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருட்களை கொண்டு சிவாச்சாரியார்கள் மட்டுமே அபிஷேகம் செய்து பிரதோ‌‌ஷ வழிபாட்டை நடத்தினர். பிரதோ‌‌ஷத்தின் போது பக்தர்கள் இன்றி பெரியகோவில் வெறிச்சோடி காணப்பட்டது.
அபிஷேகம் 
முன்னதாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கொரோனா தொற்று ஒழிய வேண்டியும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பூர்ண குணமடைய வேண்டியும் 54 குடங்கள் நீரை கொண்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சிவச்சாரியார்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி 12 முறை பிரதோ‌‌ஷ வழிபாடு நடந்தது.
 இந்த ஆண்டு 2-வது முறையாக பக்தர்கள் இன்றி பிரதோ‌‌ஷ வழிபாடு நடந்தது. அதாவது 14-வது முறையாக பிரதோ‌‌ஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story