ஒரே நாளில் ரூ.15½ கோடிக்கு மதுவிற்பனை
முழு ஊரடங்கையொட்டி தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 15½ கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. அப்போது பெட்டியிலும், சாக்குமூட்டையிலும் மதுபாட்டில்களை மதுபிரியர்கள் வாங்கி சென்றனர்.
தஞ்சாவூர்:
முழு ஊரடங்கையொட்டி தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 15½ கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. அப்போது பெட்டியிலும், சாக்குமூட்டையிலும் மதுபாட்டில்களை மதுபிரியர்கள் வாங்கி சென்றனர்.
படுஜோராக மதுவிற்பனை
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகரித்து வருகிறது. அதேபோல் தேர்தல் நேரத்திலும் மது விற்பனை படுஜோராக நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் இதை கட்டுப்படுத்த இன்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 24-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இதனால் மளிகைக்கடைகள், காய்கறி கடைகளை தவிர பிற கடைகள் அடைக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளும் அடைக்கப்பட இருப்பதால் மதுப்பிரியர்கள் அதிகஅளவில் மதுக்கடைகளில் திரண்டனர். இதன்காரணமாக டாஸ்மாக் கடைகளில் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. மற்ற நாட்களை விட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் சேர்ந்ததால் கடைகள் முன்பு கடும் நெரிசல் ஏற்பட்டது.
தள்ளுமுள்ளு
கொரோனா பரவல், சமூக இடைவெளியை பற்றி எந்த கவலையும் இன்றி ஒருவரையொருவர் இடித்து கொண்டு தள்ளுமுள்ளுகளுக்கு இடையே மதுப்பாட்டில்களை வாங்கி சென்றனர். மதுப்பிரியர்கள் 2 வாரங்களுக்கு தேவையான அளவுக்கு மதுப்பாட்டில்களை வாங்கி கொண்டு சாக்குகளில் மூட்டையாக கட்டி வீடுகளுக்கு எடுத்து சென்றனர். சிலர் பெட்டி, பெட்டியாக மதுப்பாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் பண்டிகை நாட்களில் கிடைக்கும் வருவாயை போல கூடுதல் வருவாய் கிடைத்தது.
தஞ்சை மாவட்டத்தில் 161 டாஸ்மாக் கடைகள் உள்ளன. வழக்கமான நாட்களில் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை மது விற்பனை நடைபெறும். ஆனால் முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் கடைகள் அடைப்பு என்பதால் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் மட்டும் ரூ.15 கோடியே 42 லட்சத்து 35 ஆயிரத்து 700-க்கு மது விற்பனை நடைபெற்றது.
2-வது நாளில் விற்பனை அதிகம்
தீபாவளி போன்ற பண்டிகை நாட்களை விட அதிகஅளவுக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. 2-வது நாளாக நேற்றும் மதுப்பிரியர்கள் அதிகஅளவில் வந்திருந்து தங்களுக்கு தேவையான அளவுக்கு மதுப்பாட்டில்களை வாங்கி சென்றனர். மதுப்பிரியர்களின் வசதிக்காக டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டு இருந்தது. இப்படி ஒரே நேரத்தில் பெட்டி, பெட்டியாகவும், சாக்குமூட்டைகளில் கட்டியும் மதுப்பாட்டில்களை வாங்கி சென்றதால் பல டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்கள் எல்லாம் விற்று தீர்ந்தன.
பல கடைகளில் மதுப்பிரியர்கள் கேட்கக்கூடிய மதுவகைகள் இல்லாததால் கிடைத்த மதுவகைகளை வாங்கி சென்றனர். நேற்று முன்தினத்தை விட நேற்று கூடுதலாக மதுவிற்பனை நடைபெற்றது.
Related Tags :
Next Story