ரெம்டெசிவிர் மருந்தை 12 மாதங்கள் பயன்படுத்தலாம்; மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் வசதி- கலெக்டர் தகவல்


ரெம்டெசிவிர் மருந்தை 12 மாதங்கள் பயன்படுத்தலாம்; மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 100 ஆக்சிஜன் படுக்கைகள் வசதி- கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 May 2021 4:05 AM IST (Updated: 11 May 2021 4:05 AM IST)
t-max-icont-min-icon

ரெம்டெசிவிர் மருந்தை 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என்றும், மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு 100 ஆக்சிஜன் படுக்கை வசதி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செயல்பாட்டு வருவதாகவும் கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.


திருச்சி, மே.11-
ரெம்டெசிவிர் மருந்தை 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என்றும், மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு 100 ஆக்சிஜன் படுக்கை வசதி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செயல்பாட்டு வருவதாகவும் கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
12 மாதங்கள் அவகாசம்

திருச்சி மாவட்டத்தில் கடந்த 8-ந் தேதி முதல், கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. மொத்தம் வந்த 500 குப்பி மருந்துகளில் முதல் நாள் 184 மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது. அவசியம்தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே, உரிய ஆவணத்துடன் வந்தால்தான் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது மேலும் 300 குப்பி மருந்துகள் வந்துள்ளது. ரெம்டெசிவிர் மருந்துகள் 3 மாதங்கள் தான் பயன்படுத்தப்படும் என ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. தற்போது 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என சுகாதார துறை அறிவித்துள்ளது. அதனால், ஏற்கனவே ஒட்டப்பட்ட காலாவதி தேதியின் மீது புது தேதி ஒட்டப்பட்டது. யாருக்கும் அச்சம் தேவையில்லை. ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பு நாளிலிருந்து 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

மணப்பாறையில் 100 ஆக்சிஜன் படுக்கை

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் 450 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் 200 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட உள்ளது. அதே போல ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் 50 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. அங்கு கூடுதலாக 30 படுக்கைகள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மணப்பாறை அரசு மருத்துவமனையில் 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இது இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது. திருச்சி மாவட்டத்தில் தினமும் 6,000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவற்றில் 12 முதல் 14 சதவீதம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது.

கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை

திருச்சியில் கொரோனா காரணமாக இறந்தவர்கள் வயது முதிர்ந்தவர்களாகவும், இருதய நோய் மற்றும் நீரழிவு நோய் உள்ளிட்ட இணை நோய் உள்ளவர்களாகவும் தான் இருக்கிறார்கள்.

ரெம்டெசிவிர் உள்ளிட்ட எந்த மருந்தையும் கள்ள சந்தைகளில் விற்பனை செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊரடங்கிற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் தான், வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை குறைக்க முடியும். 

எனவே, ஊரடங்கு காலக்கட்டத்தில் மக்கள் அநாவசியமாக வெளியே வர வேண்டாம். மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.

Next Story