கொரோனா சிகிச்சையால் அரசு மருத்துவமனைகளின் மீது மக்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது


கொரோனா சிகிச்சையால் அரசு மருத்துவமனைகளின் மீது மக்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
x
தினத்தந்தி 12 May 2021 4:50 PM GMT (Updated: 12 May 2021 4:50 PM GMT)

உயிரை பணயம் வைத்து பணிபுரிகிறோம்., கொரோனா சிகிச்சையால் மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீது புதிய நம்பிக்கையும், மரியாதையும் ஏற்பட்டுள்ளது என்று செவிலியர்கள் தெரிவித்தனர்.

ராமநாதபுரம், 
உயிரை பணயம் வைத்து பணிபுரிகிறோம்., கொரோனா சிகிச்சையால் மக்களுக்கு அரசு மருத்துவமனைகளின் மீது புதிய நம்பிக்கையும், மரியாதையும் ஏற்பட்டுள்ளது என்று செவிலியர்கள் தெரிவித்தனர். 
செவிலியர் தினம்
மனித சமுதாயத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பணி மிகவும் போற்றத்தக்கது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்கள் ஆற்றி வரும் பணி மகத்தானது. உலக செவிலியர் தினத்தையொட்டி உலகமே செவிலியர்களின் சேவையை நன்றியுடன் பாராட்டி வருகிறது. முன்களப்பணியாளர்களான செவிலியர்கள் பலர் சிகிச்சை அளிக்கும் போது அவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
கொரோனா பணியின்போது பல செவிலியர்கள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியும் செவிலியர் தீபலெட்சுமி கூறியதாவது:-
ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து பணிபுரிகிறோம்.தற்போது முழு ஊரடங்கு காரணமாக அனைவரும் குடும்பத்தினருடன் வீட்டில் பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் நாங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை விட்டு பல இன்னல்களுக்கு இடையே சேவை ஆற்றி வருகிறோம். உயிருக்கு போராடும் நோயாளிகளை கையாளும்போது எதிர்பாராத விதமாக எங்களுக்கும் நோய் தொற்று ஏற்பட்டு விடுகிறது.  தற்போது நானும் சிகிச்சையில்தான் உள்ளேன். 
பாதுகாப்பு
இது போன்ற கொடிய நோய் தொற்றை இதற்கு முன் பார்த்ததே இல்லை. பலர் உயிர் இழந்து வருகின்றனர். எனவே அரசின் அறிவுரைகளை ஏற்று பொதுமக்கள் வெளியே வராமல் இருந்து நோயில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டுகிறேன்.
அரசு செவிலியர் கீதா கூறியதாவது:-
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் நோயாளிகளை சிகிச்சை அளித்து மீட்கும் மகத்தான பணியை மேற்கொள்வதில் மிகுந்த மன நிறைவும், பெருமையும் அடைகிறேன். அரசு மருத்துவமனைகளின் சேவை குறித்து எப்போதும் எதிர்மறையான கருத்துக்களை பலரும் கொண்டிருப்பார்கள். ஆனால் இந்த பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பல உயிர்களை காப்பாற்றியது அரசு மருத்துவ மனைகள்தான். 
இதுவரை அரசு ஆஸ்பத்திரிக்கே வராதவர்கள் கூட இவ்வளவு தீவிர தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை பார்த்து கண்கலங்கி நன்றி தெரிவித்ததை பார்க்க முடிந்தது.
பாராட்டு
கொரோனா பாதிப்பிற்கு பின்னர் மக்களுக்கு அரசு மருத்துவ மனைகளின் மீது புதிய நம்பிக்கையும், மரியாதையும் ஏற்பட்டு உள்ளது.அதேபோல கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை தரமாகவும், பாராட்டும் படியாகவும் உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அரசு செவிலியர் ஜீவிதா கூறியதாவது:-
அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை தாய், தந்தையாக, சகோதர, சகோதரிகளாக, உறவுகளாக பார்க்கிறோம். தனியார் மருத்துவமனைகளில் அதிக பணம் செலவழிக்க முடியாத வர்கள் அரசு மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். பல லட்சம் செலவழித்தாலும் கிடைக்காத சேவையை அரசு மருத்துவமனையில் இலவசமாக வழங்கி வருகிறோம். தற்போது கடினமான சூழ்நிலையில் சேவை ஆற்றி வருகிறோம்.
அங்கீகாரம்
பரமக்குடியை சேர்ந்த நகர்நல சுகாதார செவிலியர் மேரி:-, தன்னலமற்ற சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் தான் செவிலியர் தினம். செவிலியர் பணியானது மிகுந்த மதிப்போடும், மரியாதையோடும், பார்க்கும் பணி ஆகும். தற்போது கொரோனா காலத்திலும் எங்கள் உயிரை பணயம் வைத்து களத்தில் நின்று நோயாளிகளுக்கு சேவை புரிவது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும், உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story