கடையம் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது டிரோன் மூலம் போலீசார் நடவடிக்கை


கடையம் அருகே  மணல் கடத்திய 3 பேர் கைது  டிரோன் மூலம் போலீசார் நடவடிக்கை
x
தினத்தந்தி 13 May 2021 7:17 PM GMT (Updated: 13 May 2021 7:17 PM GMT)

கடையம் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். டிரோன் மூலம் போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

கடையம்:
கடையம் அருகே மணல் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். டிரோன் மூலம் போலீசார் இந்த நடவடிக்கை மேற்கொண்டனர்.

டிரோன் மூலம்...

தென்காசி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் உத்தரவின்பேரில் மணல் கடத்தலை முற்றிலும் தடுக்கும் விதமாக தனி குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் முக்கியமாக மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் கடையம் அருகே உள்ள வெங்கடாம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் ரவி, ஆனந்தராஜ், போலீசார் பட்டமுத்து, வைகை செல்வன் ஆகியோர் டிரோன் மூலம் மணல் கடத்தல் கும்பலை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். 

3 பேர் கைது

அதன்படி ஆசிர்வாதபுரம் பகுதியை சேர்ந்த மனோன்மணி மகன் சாமுவேல் (வயது 31), மேலமெஞ்ஞானபுரத்ைத சேர்ந்த மிக்கேல் மகன் ஆரோக்கியசாமி (38), புளியங்குடியை சேர்ந்த பால்ராஜ் மகன் மகேஷ் கண்ணன் (19) உள்பட 4 பேர் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சாமுவேல் உள்பட 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய செட்டியூரை சேர்ந்த பாலமுருகன் (38) என்பவரை தேடி வருகின்றனர்.

மேலும் கைதானவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

Next Story