பகல் 10 மணிக்கு மேல் சுற்றித்திரிந்த 105 வாகனங்கள் பறிமுதல்-போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் நடவடிக்கை


பகல் 10 மணிக்கு மேல் சுற்றித்திரிந்த 105 வாகனங்கள் பறிமுதல்-போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 May 2021 6:24 PM GMT (Updated: 15 May 2021 6:24 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் சுற்றித்திரிந்த ஒரு கார் உள்பட 105 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் சுற்றித்திரிந்த ஒரு கார் உள்பட 105 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஊரடங்கு தீவிரம்

கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை பொதுமக்கள் முறையாக பின்பற்றவில்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டு ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அனைத்து கட்சியினரும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை தீவிரப்படுத்துமாறு கேட்டு கொண்டனர். இதையடுத்து ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

எச்சரிக்கை

சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது தேவையின்றி சுற்றித்திரிபவர்களுக்கு அபராதம் விதித்தும், மீண்டும் வெளியில் சுற்றித்திரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்து அனுப்பினர்.
ஆனால் நேற்று போலீசாரின் எச்சரிக்கையை மீறி பகல் 10 மணிக்கு மேல் காரணம் இல்லாமல் சுற்றி திரிந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

105 வாகனங்கள் பறிமுதல்

இதன்படி சிவகங்கை போலீஸ் சப்-டிவிசன் பகுதியில் 27 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் காரைக்குடி சப்-டிவிசன் பகுதியில் ஒருகார் உள்பட 22 இருசக்கரவாகனங்கள் பறிமுதல் செய்யபட்டன.
திருப்பத்தூர் போலீஸ் சப்-டிவிசன் பகுதியில் 27 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேவகோட்டை போலீஸ் சப்-டிவிசன் பகுதியில் 18 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மானாமதுரை போலீஸ் சப்-டிவிசன் பகுதியில் 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மாவட்டம் முழுவதும் 105 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story