முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூச்சுத்திணறலால் தாய் அவதி: ஆக்சிஜன் படுக்கை வசதி செய்து கொடுத்த எம்.எல்.ஏ.வுக்கு மகள் கண்ணீர் மல்க நன்றி


முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூச்சுத்திணறலால் தாய் அவதி: ஆக்சிஜன் படுக்கை வசதி செய்து கொடுத்த எம்.எல்.ஏ.வுக்கு மகள் கண்ணீர் மல்க நன்றி
x
தினத்தந்தி 16 May 2021 1:23 PM GMT (Updated: 16 May 2021 1:23 PM GMT)

முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட தாய்க்கு ஆக்சிஜன் படுக்கை வசதி செய்து கொடுத்த மாரிமுத்து எம்.எல்.ஏ.வுக்கு அவரது மகள் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாரிமுத்து எம்.எல்.ஏ. திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன், நகர செயலாளர் மார்க்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர். ஆய்வின்போது நோயாளிகளிடம் குறைகளையும், டாக்டரிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும் மாரிமுத்து எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.

மூச்சு திணறல்

அப்போது கொரோனா தொற்றால் 68 வயது மூதாட்டியை அழைத்து வந்த அவரது மகள், எனது அம்மாவுக்கு நேற்றுமுன்தினம் கொரோனா தொற்று உறுதியானதால் மூச்சு திணறல் ஏற்பட்டது. முதலில் இங்கு கொண்டு வந்தோம். பின்னர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றோம். அங்கு ஆக்சிஜன் படுக்கை இருப்பு இல்லை என டாக்டர்கள் கூறி, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு சென்றும் அங்கும் எனது அம்மாவுக்கு ஆக்சிஜன் படுக்கை தரவில்லை. இதுகுறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டோம். ஆனால் ஆக்சிஜன் படுக்கை இல்லை என கூறி எங்களை காக்க வைத்தனர். அப்போது அம்மாவுக்கு அதிகளவில் மூச்சு திணறல் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது.

கதறி அழுதார்

அந்த நேரத்தில் சிலரும் அங்கு மூச்சு திணறலில் இறந்துபோனார்கள். அதனால் பயந்துபோய் அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி வந்துட்டோம். இங்கு த.மு.மு.க. நிர்வாகிகள் ஆக்சிஜன் கொடுத்து உதவினர். ஆனால் இங்கும் முடியாததால் மறுபடியும் இங்கு அழைத்து வந்துள்ளேன். எப்படியாவது நீங்கள் தான் எனது அம்மாவை காப்பாற்ற வேண்டும் என எம்.எல்.ஏ. மாரிமுத்துவிடம் கதறி அழுதார். இதுகுறித்து உடனடியாக அங்கிருந்த டாக்டர்களிடம் அவர் விவரம் கேட்டார்.

கண்ணீர் மல்க நன்றி

பின்னர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு எம்.எல்.ஏ. தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆக்சிஜன் படுக்கை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆக்சிஜன் படுக்கை அனுப்பிவைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் உடனடியாக உதவி செய்த மாரிமுத்து எம்.எல்.ஏ.வுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Next Story