இனிமேல் அரசின் ஊரடங்கு உத்தரவை மதிப்போம் என வாகன ஓட்டிகள் உறுதிமொழி


இனிமேல் அரசின் ஊரடங்கு உத்தரவை மதிப்போம் என வாகன ஓட்டிகள் உறுதிமொழி
x
தினத்தந்தி 19 May 2021 5:46 PM GMT (Updated: 2021-05-19T23:16:11+05:30)

விழுப்புரத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை இனிமேல் அரசின் ஊரடங்கு உத்தரவை மதிப்போம் என போலீசார் உறுதி மொழி ஏற்க வைத்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரராஜா, மேற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஷாஜகான் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

உறுதிமொழி ஏற்ற வாகன ஓட்டிகள்

அப்போது அந்த வழியாக ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றி வந்த வாகன ஓட்டிகளை போலீசார் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர்களிடம் இனிமேல் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்து உறுதிமொழி ஏற்க வைத்தனர். அதாவது இனிமேல் அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து நடப்போம், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்து நோய் பரவலுக்கு காரணமாக இருக்க மாட்டோம் என்று வாகன ஓட்டிகள் உறுதிமொழி ஏற்றனர்.
அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த அரசு பெண் மருத்துவர் ஒருவர், அந்த வாகன ஓட்டிகளிடம் சில அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியே வர வேண்டும். அவ்வாறு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், அவ்வப்போது சானிடைசரால் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றுங்கள், கொரோனாவின் 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. அத்தியாவசிய பொருட்களை வாங்க வருகிறோம் என்ற பெயரில் தேவையில்லாமல் வெளியே வராதீர்கள், உங்களால் உங்களுடைய குடும்பத்தினருக்கும் நோய் தொற்று பரவும். அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய இடமில்லை, மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியுள்ளன. கொரோனாவின் தாக்கத்தை புரிந்துகொண்டு வெளியே வராமல் இருங்கள். கொரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த அரசுக்கு உறுதுணையாக இருங்கள் என்று அறிவுறுத்தினார்.

Next Story