சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு மதுபாட்டில்கள் திருட்டு மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
சேத்தியாத்தோப்பு அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளைப்போட்டு ரூ.97 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகி்ன்றனர்.
சேத்தியாத்தோப்பு,
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது பின்னலூர் கிராமம். இந்த கிராமத்தில் வயல் வெளிபகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது.
தற்போது கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அந்த வகையில் பின்னலூரில் உள்ள டாஸ்மாக் கடையும் மூடப்பட்டு இருந்தது.
சுவரில் துளை
இந்த நிலையில், நேற்று அந்த கடையின் பின்பக்க சுவரில் ஒரு துளை ஒன்று இருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, சேத்தியாத்தோப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், இன்ஸ்பெக்டர் மைக்கேல் மற்றும் போலீசார், டாஸ்மார்க் மேற்பார்வையாளர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
மதுபாட்டில்கள் திருட்டு
தொடர்ந்து மேற்பார்வையாளர் செந்தில்குமார் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையில் இருந்த மதுபாட்டில்கள், பீர் பாட்டில்கள் போன்றவை திருடு போய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.97 ஆயிரம் ஆகும். கடை நீண்ட நாட்களாக பூட்டியை இருப்பதை பயன்படுத்தி, மர்ம மனிதர்கள் சுவரில் துளைப்போட்டு உள்ளே சென்று மதுபாட்டில்களை திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பரபரப்பு
திருட்டு சம்பவம் நடந்த டாஸ்மாக் கடையின் உள்ளே ரூ.6 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் இருந்தது. இதில் 97 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் திருடு போய் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கதாகும். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story