கொரோனா ஊரடங்கு எதிரொலி: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சமையல் கலைஞர்கள் - நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை


கொரோனா ஊரடங்கு எதிரொலி: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சமையல் கலைஞர்கள் - நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 28 May 2021 9:00 PM IST (Updated: 28 May 2021 9:00 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு எதிரொலியால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சமையல் கலைஞர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த 10-ந் தேதி முதல் 2-ம் கட்ட ஊரடங்கு அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இருந்தபோதும் வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதி கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் மாநில அரசு திருமணங்கள், காதுகுத்து, வளை காப்பு, மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சி நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் தற்போது 20 பேரை வைத்துக்கொண்டு திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சீர்காழி தாலுகாவில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் வேலையில்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் இவர்களை சார்ந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பயன்பட்டு வந்தனர். தற்போது இவர்களுக்கும் வேலை இல்லாததால் வருமானம் இன்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே அரசு சமையல் கலைஞர்கள் மற்றும் சமையல் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இதுகுறித்து சீர்காழி சமையல் கலைஞர் சங்க செயலாளர் குமார் கூறுகையில், கொரோனா ஊரடங்கு இருக்கும் முன்பே பல்வேறு திருமணத்திற்காக சமையல் செய்வதற்கு ஆர்டர் கொடுத்திருந்தனர். மாநில அரசின் கெடுபிடியால் ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவர்கள் தற்போது ரத்து செய்துவிட்டனர்.

தற்போது வைரஸ் தாக்கத்தால் தமிழக அரசு திருமணங்கள் நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் சமையல் கலைஞர்களுக்கும், அதனை சார்ந்த தொழிலாளிகளுக்கும் வேலை கிடைக்காமல் கடந்த ஓராண்டிற்கு மேலாக கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எனவே அரசு பாதிக்கப்பட்டு வரும் சமையல் கலைஞர்கள் மற்றும் சமையல் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Next Story