கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம்


கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 28 May 2021 11:32 PM IST (Updated: 28 May 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் ஆர்வம்

கோவை

கோவை மாவட்டத்தில் 47 மையங்களிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

கோவேக்சின்

நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. 

இதில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் போதிய அளவு இருப்பு இல்லாததால் கடந்த சில வாரங்களாக கோவேக்சின் தடுப்பூசி போடப்படாமல் இருந்து வந்தது.


இதனால் முதல் டோஸ் கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்கள் 2-வது டோஸ் கோவேக்சின் தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கோவைக்கு கோவேக்சின் தடுப்பூசி அனுப்பி வைக்கப் பட்டது. 

இதையடுத்து மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப் பட்டு கோவேக்சின் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

காலை முதல் குவிந்தனர்

இதற்காக கோவை மாவட்டத்தில் மொத்தம் 47 மையங்களில் நேற்று கோவேக் சின் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் 12 மையங்கள் ஊரக பகுதிகளிலும், 35 மையங்கள் கோவை மாநகராட்சி பகுதியிலும் அமைக்கப்பட்டு இருந்தது. 

இந்த மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் நேற்று காலை 7 மணி முதல் மையங்களின் முன்பு தடுப்பூசி போட பொதுமக்கள் குவிய தொடங்கினர். அங்கு பாதுகாப்புக்காகக நின்ற போலீசார், பொதுமக்களிடம் சமூக இடைவெளி விட்டு நின்று அறிவுறுத்தினர். ஒவ்வொரு மையத்திலும் தலா 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.

வாக்குவாதம்

கூட்டம் அதிகமாக இருந்ததால் பல மையங்களில் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. மையங்களில் இருந்த பணியாளர்கள் பொதுமக்களின் ஆதார் விபரங்களை சரிபார்த்து கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தினர். 

சில மையங்களில் விரைவாக தடுப்பூசி தீர்ந்து விட்டது. இதனால் அங்கு காத்திருந்த பொதுமக்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பினர். கோவையில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும்பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

கலெக்டர் ஆய்வு

கோவை சவுரிபாளையத்தில் உள்ள சிறப்பு பள்ளியில் படிக்கும் 15 மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்கள் 10 பேருக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று நடைபெற்றது. இதை கலெக்டர் நாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் அவர், அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story