நீலகிரி மாவட்டத்தில் கொரோனா விதி மீறல்; 320 வாகனங்கள் பறிமுதல்


நீலகிரி மாவட்டத்தில் கொரோனா விதி மீறல்; 320 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 May 2021 4:51 PM GMT (Updated: 30 May 2021 5:03 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா விதி மீறியவர்களின் 320 வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

ஊட்டி,

கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று 7-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட எல்லையை ஒட்டி உள்ள 16 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். 

அவசர மருத்துவ தேவை மற்றும் சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. முழு ஊரடங்கால் ஊட்டியில் முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி நிலையில் காட்சி அளிக்கிறது. முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்கள், சாலையில் நடமாடும் நபர்களை போலீசார் விசாரித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 5 போலீஸ் உட்கோட்டங்களில் முககவசம் அணியாத 60 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.13,800 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 

தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கில் அவசியமில்லாமல் வாகனங்களில் சுற்றிய 139 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வாகன உரிமையாளர்களுக்கு ரூ.69 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டன. 49 இருசக்கர வாகனங்கள், 22 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 71 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

குறிப்பாக முழு ஊரடங்கு அமலுக்கு வந்த கடந்த 24-ந் தேதி ஒரே நாளில் 111 வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. 

கடந்த ஒரு வாரத்தில் நீலகிரியில் முழு ஊரடங்கை கடைபிடிக்காமல், கொரோனா விதி மீறி வெளியே சுற்றியவர்களின் 320 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவலை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story