சேலம் முகமது புறா தெருவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இறைச்சி வாங்க குவிந்த பொதுமக்கள் போலீசார் விரட்டியதால் பரபரப்பு
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இறைச்சி வாங்க குவிந்த பொதுமக்கள்
சேலம்:
சேலத்தில் முகமது புறா தெருவில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இறைச்சி வாங்க பொதுமக்கள் குவிந்தனர். அப்போது அவர்களை போலீசார் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு வருகிற 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சேலம் மாநகரில் வழக்கமாக விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெறும். ஆனால் கடந்த 3 வாரமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் இறைச்சி மற்றும் மீன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு குழு
இருப்பினும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இறைச்சி மற்றும் மீன் கடைகளை திறந்து வியாபாரம் நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியாமல் இறைச்சி மற்றும் மீன் வியாபாரிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
கொரோனா பரவும் சூழ்நிலை ஏற்படும் என்பதால் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சேலத்தில் பல இடங்களில் மறைமுகமாக இறைச்சி மற்றும் மீன் விற்பனை நடந்து வருவதை காணமுடிகிறது.
மக்கள் கூட்டம்
இந்நிலையில், சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த முகமது புறா தெருவில் நேற்று காலை இறைச்சி வாங்குவதற்காக அதிகளவில் பொதுமக்கள் திரண்டனர். அங்கு ஒரு சில கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான கடைகளில் ஆடு, மாடு, கோழி இறைச்சிகள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டது.
இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசலும் நிலவியது. கடையில் இருந்த வியாபாரிகள் சிலர் அவசர, அவசரமாக இறைச்சியை விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். பழைய மார்க்கெட் தெருவிலும் இறைச்சி வாங்குவதற்காக பொதுமக்கள் வந்திருந்தனர்.
விரட்டியடிப்பு
ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் முகமது புறா தெருவில் மட்டும் நேற்று இறைச்சி விற்பனை அமோகமாக நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று இறைச்சி கடைகளின் முன்பு திரண்டிருந்த பொதுமக்களை எச்சரிக்கை செய்து வீடுகளுக்கு செல்லுமாறு விரட்டி அடித்தனர்.
போலீசார் வருவதை கண்ட பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
அப்போது அங்கிருந்த மக்களிடம் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவர், உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து வீடுகளை விட்டு வெளியே வராதீர்கள்? என கெஞ்சினார். இப்படி கூட்டம், கூட்டமாக இறைச்சி வாங்க குவிந்தால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கொரோனாவை ஒழிக்க முடியாது என உருக்கமாக பேசினார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் திறக்கப்பட்ட இறைச்சி கடைகள் அனைத்தையும் அடைக்க போலீசார் அறிவுறுத்தினர்.
போலீசார் விசாரணை
அப்போது அங்கு கடையை திறந்து இறைச்சி விற்பனையில் ஈடுபட்டதாக கூறி ஒருவரை போலீசார் பிடித்து விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் அஸ்தம்பட்டி, மணக்காடு, குகை, பெரமனூர், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஒருசில இறைச்சி கடைகளில் மறைமுகமாக இறைச்சி விற்பனை செய்யப்பட்டது.
சேலம் மாநகரில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யப்படுவதை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் கடைகளை பூட்டி சீல் வைப்பதோடு அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story