விருத்தாசலத்தில் காரணமின்றி சுற்றித்திரிந்தவர்களிடம் வெளியே வராதீர்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய அமைச்சர்


விருத்தாசலத்தில் காரணமின்றி சுற்றித்திரிந்தவர்களிடம் வெளியே வராதீர்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய அமைச்சர்
x
தினத்தந்தி 31 May 2021 4:53 PM GMT (Updated: 31 May 2021 4:53 PM GMT)

விருத்தாசலத்தில் காரணமின்றி சுற்றித்திரிந்தவர்களிடம் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கையெடுத்து கும்பிட்ட படி அமைச்சர் சி.வெ. கணேசன் கேட்டுக்கொண்டது பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விருத்தாசலம், 


தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது.  இதி்ல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருசில இறைச்சி கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் நடைபெற்றது. 

இறைச்சி வாங்குவதற்காக அசைவ பிரியர்கள் படையெடுத்து சென்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக கூறி ‘தினத்தந்தி’யில் நேற்று செய்தி வெளியானது. 

அமைச்சர் ஆலோசனை

இதை பார்த்த அமைச்சர் சி.வெ. கணேசன் இது தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன் மற்றும் நகர போலீசாரை அழைத்து ஆலோசனை நடத்தினார். மேலும் ஊரடங்கை மீறி சுற்றுபவர்களை எச்சரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

தொடர்ந்து, விருத்தாசலம் பாலக்கரை, கடைவீதி ஆகிய பகுதிகளுக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சர் சி.வெ. கணேசன் பார்வையிட்டார். அப்போது அந்த வழியாக வாகனங்களில் காரணமின்றி வந்தவர்களை நிறுத்தி, இப்படி ஊரடங்கை மீறி வந்தால் கொரோனாவை எப்படி கட்டுப்படுத்த முடியும். இதேபோன்று  சென்று கொண்டிருந்தால் உங்களுக்கு மட்டும் அல்ல, உங்களைச் சார்ந்தவர்களுக்கும் ஆபத்து தான்.

தயவு செய்து வராதீர்கள்

 விருத்தாசலம் பகுதியில் ஒரு கட்டுப்பாடு இல்லை என்பது போன்ற தகவல்கள் வருகிறது. இப்படி மக்கள் திரண்டு வந்தால் ஊரடங்கு அமலில் உள்ளது என்று கூற முடியுமா?.

மாவட்டத்தில் தினசரி  8 முதல் 10 பேர் மருத்துவமனைகளில் இறந்து வருகிறார்கள்.  இதையெல்லாம் எண்ணி பார்த்து, தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். 

காய்கறி, மளிகை பொருட்கள்

 அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியேற வர வேண்டாம். தங்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் அனைத்தும் நீங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு உங்களை தேடி வருவதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

 எனவே  தேவையின்றி சுற்றித்திரிந்து நோய் தாக்கத்திற்கு ஆளாக வேண்டாம் என்று கூறிய அவர், தனது கைகளை எடுத்து கும்பிட்ட படி தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என்று கெஞ்சும் விதமாக கேட்டுக்கொண்டார்.  

இதை பார்த்த மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அந்த வழியாக சென்றவர்களுக்கு முக கவசங்களைஅவர் வழங்கினார். 

போலீசாருக்கு உத்தரவு

தொடர்ந்து விருத்தாசலம் பாலக்கரை மற்றும் கடைவீதியில் பணியில் இருந்த போலீசாரிடம், விருத்தாசலத்தில் கட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்கள் சுற்றித்திரிகின்றனர்.

 கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காகத்தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுற்றித்திரிவதை கட்டுக்குள் கொண்டு வந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று அமைச்சர் சி.வெ. கணேசன் போலீசாருக்கு உத்தரவிட்டு, அங்கிருந்து சென்றார்.

Next Story