போலீசார் அதிரடி சோதனை: சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 74 பேர் கைது


போலீசார் அதிரடி சோதனை: சாராயம், மதுபாட்டில்கள் விற்ற 74 பேர் கைது
x
தினத்தந்தி 31 May 2021 4:58 PM GMT (Updated: 31 May 2021 4:58 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்ற 74 பேரை கைது செய்தனர்.

கடலூர், 


தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இதனால் பால், மருந்து போன்ற அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதில் டாஸ்மாக் கடையும் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் மது பிரியர்கள் மது குடிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். அவர்கள் சமூக வலைத்தளங்களிலும் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி பதிவிட்டு வருகின்றனர்.

2 பேர் கைது

இருப்பினும் ஒரு சிலர் சாராயம் காய்ச்சி குடித்தல், விற்பனை செய்தல் போன்ற விபரீத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மயிலாடுதுறையில் சாராயம் குடித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிரடி சோதனை

இந்த சம்பவத்தையொட்டி கடலூர் மாவட்டத்தில் யாராவது சாராயம் காய்ச்சுகிறார்களா? மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்கிறார்களா? என்பதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவ் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை 7 உட் கோட்டத்திற்குட்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 46 போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இது தவிர கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரும் தங்கள் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

74 பேர் கைது

அப்போது சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல், மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ததாக 74 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு, அவர்கள் 74 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 725 மதிப்புள்ள சாராயம் மற்றும் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 தொடர்ந்து நேற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் விற்கப்படுகிறதா? யாரேனும் சாராயம் காய்ச்சி கிறார்களா? என்பதை தீவிரமாக கண்காணித்தனர்.

Next Story