நெல்லையில் கொரோனா பரவல் 13 சதவீதமாக குறைந்தது; அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
தீவிர தடுப்பு நடவடிக்கையால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் 13 சதவீதமாக குறைந்தது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் உள்ள 296 ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று நடந்தது. நெல்லை மாநகர பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை பணியாளர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கான தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் தினமும் 5 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இலக்கையும் தாண்டி தினமும் 9 ஆயிரம் பேர் வரை தடுப்பூசி செலுத்த வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் இதுவரை 1.32 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. தீவிர தடுப்பு நடவடிக்கையால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் 24 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசே இயக்குவது தொடர்பாக பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார். இதற்காக மத்திய தொழில் வர்த்தக துறை மந்திரியை நேரில் சந்தித்து கடிதம் அளிக்கப்பட்டது. 10 நாட்களுக்குள் தடுப்பூசி மையத்தை இயக்குவது தொடர்பாக பதில் அளிப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவித்த நிலையில் அவர்களது பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை 2-வது மையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும்பட்சத்தில் கூடுதலாக 24 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு கிடைத்தால் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை முழுமையாக பூர்த்தியாகும். மேலும் நெல்லை கங்கைகொண்டானில் உள்ள தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அங்கு விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். தளர்வில்லா ஊரடங்கிற்குப்பின் நெல்லை மாவட்டத்தில் 1,556 வாகனங்கள் மூலம் 1,960 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பாளையங்கோட்டை திரு இருதய மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு சென்ற அமைச்சர் தங்கம் தென்னரசு, அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி எதிரே அமைந்துள்ள காந்திமதி அம்பாள் பள்ளிக்கூட வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்கும் வகையில், புதிதாக 200 படுக்கைகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யு.ஏ. பள்ளிக்கூடத்தில் மதுரா கோட்ஸ் ஆலை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். முகாமில் 300 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து நடமாடும் மளிகை, காய்கறி வாகனங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பத்தமடையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை ஆய்வு செய்த அவர், கொரோனா நோயாளிகளுடன் காணொலிக்காட்சியில் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர் பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாமையும் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சிகளில், மாவட்ட கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன், உதவி கலெக்டர் பிரதிக் தயாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story