நெல்லையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு


நெல்லையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு
x
தினத்தந்தி 31 May 2021 8:10 PM GMT (Updated: 31 May 2021 8:10 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால், தடுப்பூசி போட வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நெல்லை:
கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 வகையான தடுப்பூசிகள் இரு தவணைகளாக செலுத்தப்படுகின்றன. நெல்லை மாவட்டத்தில் 84 நிரந்தர மையங்கள், 25 தற்காலிக மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று மேலும் 7 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் காலை 11 மணி வரை வந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு வந்தவர்களிடம் ‘தடுப்பூசி இல்லை’ என்று கூறி திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் மீனாட்சிபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குறைந்த அளவே தடுப்பூசி இருந்தது. அதனை 18 வயது முதல் 44 வயது வரையில் உள்ளவர்களுக்கு மட்டுமே செலுத்தினர். தடுப்பூசி போட வந்த 45 வயதுக்கு மேற்பட்டோரை திருப்பி அனுப்பினார்கள். பல்வேறு இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள மையத்தில் தடுப்பூசி போட ஏராளமானவர்கள் குவிந்தனர். இதனால் அங்கு வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. 

இதேபோல் பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி காலியானதால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஓரிரு நாட்களில் தேவையான தடுப்பூசி வந்து விடும். அதன்பிறகு முகாம்களுக்கு வரும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்’’ என்றனர்.

Next Story