பிறந்தநாளுக்கு சேமித்த பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய மாணவி


பிறந்தநாளுக்கு சேமித்த பணத்தை கொரோனா நிதியாக வழங்கிய மாணவி
x
தினத்தந்தி 31 May 2021 9:20 PM GMT (Updated: 31 May 2021 9:20 PM GMT)

திண்டுக்கல்லில் பிறந்த நாளுக்கு சேமித்த பணத்தை மாணவி ஒருவர் கொரோனா நிதியாக வழங்கினார்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் அருகேயுள்ள அண்ணாமலையார் மில்ஸ் காலனியை சேர்ந்தவர் கண்ணன். போலீஸ் ஏட்டு. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். 

இவருடைய மகள் பிரார்த்தனா (வயது 21). கல்லூரியில் பி.எஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்தே சேமிப்பு பழக்கம் உண்டு. 

இதனால் தான் சேமிக்கும் பணத்தின் மூலமே பிறந்தநாளை கொண்டாடுவார்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு பிறந்தநாள் ஆகும். எனவே, பிறந்தநாளை கொண்டாடுவதற்கு கடந்த ஓராண்டாக அவர் பணம் சேமித்தார். 

அந்த வகையில் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 153 சேமித்து வைத்திருந்தார். ஆனால், நேற்று பிறந்தநாளை கொண்டாடாமல் சேமித்த பணத்துடன், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு மாணவி பிரார்த்தனா வந்தார். அவருடைய தாயார் ஜெயந்தியும் உடன் வந்திருந்தார்.


பின்னர் கலெக்டர் விஜயலட்சுமியை சந்தித்து, மாணவி பிரார்த்தனா தான் பிறந்தநாளை கொண்டாட சேமித்த பணம் முழுவதையும் கொரோனா நிவாரணநிதிக்கு வழங்கினார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா வைரசால் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்படுவதோடு பலர் இறக்கினர். இதனால் பல குடும்பங்கள் சிரமப்படுகின்றன. 

இந்த சூழலில் நான் பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. எனவே, பிறந்த நாளுக்காக சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினேன், என்றார்.


Next Story