‘உதவும் கரங்கள்' காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 237 பேருக்கு கொரோனா தடுப்பூசி
‘உதவும் கரங்கள்' காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 237 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சென்னை,
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. கொரோனா தடுப்பூசி போடுவோர் ஆதார் போன்ற ஏதேனும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது.
இந்தநிலையில் மனநல காப்பகங்களில் தங்கி இருப்போருக்கும் எந்தவித நிபந்தனைகளும் இன்றி தடுப்பூசி போடவேண்டும் என உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.
அதன்படி உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் மதுரவாயல், திருவேற்காடு, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் உள்ள இல்லங்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு தடுப்பூசிகள் போடும் பணி முன்னெடுக்கப்பட்டது. அதன்படி, ‘கோவின்’ சுகாதார திட்ட மாநில அதிகாரி சதீஷ் மேற்பார்வையின்கீழ் மதுரவாயலில் 103 பேருக்கும், திருவேற்காட்டில் 102 பேருக்கும், திருவண்ணாமலையில் 32 பேருக்கும் என மனநலம் பாதிக்கப்பட்டோர் 237 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி போட்டதில் இருந்து, அவர்களது உடல்நிலை தொடர்ந்து 2 நாட்கள் கண்காணிக்கப்பட்டது. தற்போது அனைவரது உடல்நிலையும் நன்றாக இருக்கிறது. இதன்மூலம் மனநலம் பாதிக்கப்பட்டோர் நலமும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் காக்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவல் உதவும் கரங்கள் அமைப்பின் நிறுவனர் வித்யாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story