110 லிட்டர் சாராயம் பறிமுதல்; 4 பேர் கைது


110 லிட்டர் சாராயம் பறிமுதல்; 4 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2021 2:55 AM IST (Updated: 2 Jun 2021 2:55 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை பகுதியில் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்தனர்.

வேப்பந்தட்டை:

சாராயம் விற்பனை
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், மாவட்ட பகுதிகளில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் வி.களத்தூர் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது வேப்பந்தட்டை அருகே உள்ள இனாம்அகரம் பகுதியில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த நமையூரை சேர்ந்த பெரியசாமி (வயது 40), முத்துசாமி (37), திருமாந்துறையை சேர்ந்த சூரியகுமார் (25) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்கள் விற்பதற்காக வைத்திருந்த 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
4 பேர் சிறையில் அடைப்பு
இதேபோல் அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியதில் கள்ளப்பட்டி காட்டுக்கொட்டாயை சேர்ந்த ராமகிருஷ்ணன்(45) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சாராயம் விற்ற 4 பேரையும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு 9498100690 என்ற செல்போன் எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் நபர்கள் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்படும் என்று மதுவிலக்கு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story