கர்நாடகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முடிவு


கர்நாடகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முடிவு
x
தினத்தந்தி 3 Jun 2021 12:55 AM IST (Updated: 3 Jun 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில், கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு:

முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நடந்த கூட்டத்தில், கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு இன்று (வியாழக்கிழமை) வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

எடியூரப்பா ஆலோசனை

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையை தடுக்க கடந்த மே மாதம் 11-ந் தேதி 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு கடந்த மாதம் 24-ந் தேதியுடன் நிறைவடைய இருந்த நியைில் அது மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 7-ந் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே மாநிலத்தில் கொரோனா 2-வது அலை குறைந்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நிபுணர் குழு, கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 

இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் உள்ள தனது காவேரி இல்லத்தில் மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், வனத்துறை மந்திரி அரவிந்த் லிம்பாவளி, தலைமை செயலாளர் ரவிக்குமார் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஊரடங்கை நீட்டிக்க முடிவு

இதில் கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை குறைந்து வருவது குறித்தும், அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 

இதில் கலந்து கொண்ட மந்திரிகள், ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பது நல்லது என்று ஆலோசனை வழங்கினர். அதன்படி கர்நாடகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (வியாழக்கிழமை) வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

மேலும் இந்த கூட்டத்தில், ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மந்திரிகள், அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டார்.

 கருப்பு பூஞ்சையால் ஏற்படும் மரணங்களை தடுக்கவும், அந்த நோய் பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

Next Story