காணொலி மூலம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
விருதுநகரில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தினை மு.க. ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
விருதுநகர்,
விருதுநகரில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தினை மு.க. ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சிகிச்சை
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக அரசு ஆஸ்பத்திரிகளில் 417 ஆக்சிஜன் படுக்கைகளும், 4881 ஆக்சிஜன் இல்லாத படுக்கைகளும், 52 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் ஆக மொத்தம் 5,150 படுக்கைகள் உள்ளன.
மேலும் 27 கொரோனா சிகிச்சை மையங்கள் மூலமும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 334 ஆக்சிஜன் படுக்கைகள், 415 சாதாரண படுக்கைள், 365 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் ஆக மொத்தம் 1,114 படுக்கைகள் உள்ளன. இவற்றின் மூலம் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திறந்து வைத்தார்
இந்நிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஏற்பாட்டின் பேரில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி அருகே தனியார் பள்ளி வளாகத்தில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை நேற்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னையில் தலைமை செயலாளர் இறையன்பும், விருதுநகர் சிகிச்சை மைய வளாகத்தில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கலெக்டர் கண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த சிகிச்சை மையத்தில் நோய் பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக சிகிச்சை பிரிவுகள் அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவைப்படும் பட்சத்தில் அருகிலுள்ள அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் களும் வந்து நோயாளிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நியமனம்
இதனை தொடர்ந்து இங்கு நியமிக்கப்பட்டுள்ள 13 தற்காலிக டாக்டர்கள் மற்றும் 39 மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
இதில் தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், தங்கப்பாண்டியன், ஏ.ஆர். ரகுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராமசுப்பிரமணியன், மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெற்றிவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story