வருமானம் இன்றி தவிக்கும் நாட்டிய குதிரை வளர்க்கும் தொழிலாளர்கள்


வருமானம் இன்றி தவிக்கும் நாட்டிய குதிரை வளர்க்கும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 5 Jun 2021 11:17 PM IST (Updated: 5 Jun 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

வருமானம் இன்றி தவிக்கும் நாட்டிய குதிரை வளர்க்கும் தொழிலாளர்கள்

கறம்பக்குடி, ஜூன்.6-
திருமணம், காதணிவிழா ஊர்வலங்கள் தடைபட்டதால் நாட்டிய குதிரை வளர்ப்போர் வருமானம் இன்றி, குதிரையின் தீவன செலவை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
குதிரை ஊர்வலம்
தமிழ்நாட்டில் திருமணம், காதணிவிழா, மஞ்சள் நீராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் குதிரை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். திருமண விழாவின்போது மணமகன் குதிரையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார். சிலர் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக செல்வது உண்டு.
இதே போல் காதணி, மஞ்சள் நீராட்டு விழாக்களில் தாய்மாமன்கள் மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை பொருட்களுடன் குதிரைகளில் ஊர்வலமாக செல்வர். வசதிக்கு ஏற்ப 5,6, குதிரைகள் கூட ஊர்வலத்தில் பயன்படுத்தப்படுவது உண்டு. இதனால் முகூர்த்த நாட்களில் குதிரைகளுக்கு நல்ல கிராக்கி இருக்கும்
நாட்டியம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள குழந்திரான்பட்டு, நெய்வேலி ஆகிய பகுதிகளில் நாட்டிய குதிரைகள் வளர்க்கப்படுகின்றன. மேலும் சாரட் வண்டிகளும் உள்ளன. இப்பகுதியில் உள்ள குதிரைகளுக்கு நல்ல பயிற்சி கொடுக்கப்பட்டு நாட்டியத்துடன் பாதுகாப்பாக ஊர்வலம் நடத்தப்படும் என்பதால் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் கறம்பக்குடி பகுதி குதிரைகளை அழைத்து செல்வார்கள்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஊர்வலங்கள் தடைபட்டுள்ளன. எனவே நிகழ்ச்சிகள் இல்லாமல் நாட்டிய குதிரை வளர்ப்போர் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். குதிரைகளுக்கு தீவனம் வாங்கவே பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
தீவனம் வழங்க கோரிக்கை
இது குறித்து நாட்டிய குதிரை வளர்க்கும் தொழிலாளிகள் கூறும்போது, விழாக்களில் குதிரை ஊர்வலம் நடத்துவது நமது பண்பாடு மற்றும் கலாசாரம் சார்ந்தது ஆகும். கொரோனா ஊரடங்கால் திருமணம் உள்ளிட்ட விழாக்கள் எளிமையாக நடத்தப்படுவதால் கடந்த 2 ஆண்டுகளாகவே குதிரை ஊர்வலங்கள் நடத்தபடவில்லை. இதனால் குதிரைகளுக்கு, கொள்ளு, கோதுமை தவிடு, தீவனபுல் போன்றவை வாங்கவே கஷ்டபடுகிறோம். எனவே கால்நடை பராமரிப்பு துறை மூலம் நாட்டிய குதிரைகளுக்கு தீவனம் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story