வீணாகும் காய்கறிகளை குப்பையில் கொட்டும் வியாபாரிகள்
அரியலூரில், வியாபாரம் குறைந்ததால் வீணாகும் காய்கறிகளை வியாபாரிகள் குப்பையில் கொட்டுகின்றனர்.
அரியலூர்:
காய்கறிகள் விற்பனை
கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மளிகை, காய்கறி உள்ளிட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து கடந்த 15 நாட்களாக காய்கறிகளை வாகனங்களில் ஏற்றிச்சென்று வீதி வீதியாக வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
இதில் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்கு அதிக அளவில் தக்காளி, வெங்காயம், கேரட், பீட்ரூட், கத்திரிக்காய், வாழைக்காய் மற்றும் வாழை இலைஆகியவை கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் எதிர்பார்த்த அளவு வியாபாரம் நடைபெறவில்லை.
குப்பையில் கொட்டுகின்றனர்
பல கிராமங்களுக்கு காய்கறிகள் லாரிகளிலும், இருசக்கர வாகனங்களிலும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதால் அரியலூரில் வியாபாரம் மிகவும் குறைந்து போனது. இதனால் தினசரி தக்காளி, வாழை இலை மற்றும் விரைவில் கெட்டுப் போகும் காய்கறிகளை வியாபாரிகள் குப்பையில் கொட்டி வருகின்றனர். அவை மாடுகளுக்கு உணவாகின்றன.
மேலும் அதிகாலை 5 மணியில் இருந்து காலை 7 மணி வரை மொத்த விற்பனை செய்யப்படும் நிலையில், காலநேரம் குறைவாக உள்ளதால் பொருட்களை விற்க முடியாமல் வியாபாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
குழப்பத்தில் வியாபாரிகள்
தப்போது வருகிற 14-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் காய்கறி மொத்த விற்பனையை நகராட்சிக்கு சொந்தமான காந்தி மார்க்கெட்டில் நடத்துவதா? அல்லது அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடத்துவதா? என்று வியாபாரிகள் குழப்பத்தில் உள்ளனர். நாளை (திங்கட்கிழமை) சரியான வழிகாட்டுதலை நகராட்சி நிர்வாகம் தெரிவிக்க வேண்டும் என்று காய்கறி வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story