சாராயம் விற்ற, ஊறல் போட்ட 5 பேர் கைது


சாராயம் விற்ற, ஊறல் போட்ட 5 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2021 1:29 AM IST (Updated: 7 Jun 2021 1:29 AM IST)
t-max-icont-min-icon

சாராயம் விற்ற, ஊறல் போட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்

வடகாடு
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனை சிலர், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்தல், சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில், வடகாடு அருகே வடக்கு வாணக்கன்காட்டில் ஒரு வீட்டில் சாராய ஊறல் போடப்பட்டிருப்பதாக வடகாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி தலைமையிலான தனிப்படை போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனையிட்டனர்.
800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
அப்போது வடக்கு வாணக்கன்காட்டில் சந்திரமோகன் (வயது 51) என்பவரது வீட்டில் பேரல்களில் சாராய ஊறல் போடப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து சுமார் 800 லிட்டர் சாராய ஊறல் மற்றும் காய்ச்சி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 5 லிட்டர் சாராயம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி அழித்தனர். சாராய ஊறல் போட்ட சந்திரமோகனை போலீசார் கைது செய்தனர்.
மணமேல்குடி-ஆலங்குடி
இதேபோல, மணமேல்குடியை அடுத்த கட்டுமாவடி முனியன் கோவில் தெருவை சேர்ந்த அய்யாசாமி என்பவர் அவரது கூட்டாளிகளான சதாம் உசேன், முகமது இஸ்மாயில் ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் சாராயம் காய்ச்சியபோது, மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர்.  ஆலங்குடி போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது ஆம்புலி ஆற்றுப்பகுதியில் சாராயம் விற்ற ஆலங்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ்(40) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 10 லிட்டர் சாராயம், ரூ.20 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story