ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வாகனங்களில் மதுபாட்டில்களை கடத்த முயன்ற 6 பேர் கைது


ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வாகனங்களில் மதுபாட்டில்களை கடத்த முயன்ற 6 பேர் கைது
x
தினத்தந்தி 7 Jun 2021 1:15 AM GMT (Updated: 7 Jun 2021 1:15 AM GMT)

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் மதுபாட்டில்களை கடத்த முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களில் அடிக்கடி மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதால் அதனை தடுக்கும் வகையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பல்வேறு இடங்களில் கவரைப்பேட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற சந்தேகத்திற்கு இடமான 4 மோட்டார் சைக்கிள்களை அவர்கள் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவற்றில் கடத்த முயன்ற மொத்தம் 170 ஆந்திர மாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் அழகேசன் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களில் மதுபாட்டில்களை கடத்த முயன்றதாக மாதர்பாக்கத்தை சேர்ந்த சரத் (வயது 29), ஆண்டார்குப்பத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (38), சென்னையை சேர்ந்த ராஜா (31) மற்றும் அந்தோனி சூசை (30) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

அதேபோல் காட்டூர் கிராமம் அருகே காட்டூர் -மீஞ்சூர் நெடுஞ்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதிவேகமாக வந்த சொகுசு காரை மடக்கி போலீசார் சோதனையிட்டபோது, அதில் 120 ஆந்திர மாநில மதுபாட்டில்கள் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் 120 பாட்டில்களையும் கைப்பற்றிய போலீசார், மதுக்கடத்தலில் ஈடுபட்ட சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த வினோத் (36), சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த அசோக்குமார் (36) ஆகிய 2 பேரையும் கைது செய்து, பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story