ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிப்பு: சேலத்தில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன பொதுமக்கள் ஆர்வமுடன் பொருட்கள் வாங்கினர்
ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சேலத்தில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஆர்முடன் பொருட்கள் வாங்கி சென்றனர்.
சேலம்:
ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சேலத்தில் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஆர்முடன் பொருட்கள் வாங்கி சென்றனர்.
ஊரடங்கில் தளர்வு
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இறைச்சி, மளிகை, காய்கறி கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் தனியாக செயல்படும் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் நேற்று காலை திறக்கப்பட்டன.
கடந்த 2 வாரங்களாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் நேற்று கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்வமுடன் வாங்கினர்.
மொத்த விற்பனை கடைகள்
சேலத்தில் வர்த்தக கேந்திரமாக விளங்கும் செவ்வாய்பேட்டை, லீ பஜார், பால் மார்க்கெட் பகுதியில் நேற்று காலை மொத்த மளிகை கடைகள் திறக்கப்பட்டன. அங்கு சில்லரை வியாபாரிகள் குவிந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. சில்லறை வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு தேவையான மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி சென்றனர். இதனால் மொத்த வியாபார கடைகளில் நேற்று காலை முதல் மாலை வரை விற்பனை மும்முரமாக நடந்தது.
அதேநேரத்தில் சேலம் கடைவீதி, சின்னக்கடை வீதியில் பழம், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் திறந்து இருந்தன. கடைகளுக்கு மக்கள் முக கவசம் அணிந்து வந்து சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக நின்று பழங்கள், பூக்களை வாங்கி சென்றனர்.
வெறிச்சோடிய கடைவீதி
அஸ்தம்பட்டி, சூரமங்கலம், அழகாபுரம், குகை, நெத்திமேடு, தாதாகப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட இடங்களிலும் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன. அந்த கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என மக்கள் மளிகை பொருட்களை மொத்தமாக வாங்கி சென்றதை காண முடிந்தது.
பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், நகரின் முக்கிய வீதிகளில் உள்ள ஜவுளி கடைகள், பாத்திர கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட இதர கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
பார்சல் சேவை
பெட்ரோல் விற்பனை நிலையம் வழக்கம் போல் செயல்பட்டன. ஓட்டலில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மற்றும் வழங்கப்பட்டு வருகிறது.
2 வாரங்களுக்கு பிறகு சூரமங்கலம் மீன் மார்க்கெட் திறக்கப்பட்டதால் அங்கு நேற்று மீன் வாங்குவதற்காக ஏராளமானோர் திரண்டனர். பின்னர் அவர்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி சென்றனர்.
போலீசார் தீவிர கண்காணிப்பு
மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள் 30 சதவீத பணியாளர்களுடன் இயங்கின. சார் பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளைக்கு 50 டோக்கன் வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடந்தது.
சில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளதால் தேவையில்லாமல் சாலையில் வாகனங்களில் செல்வோரை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story