ஆண்டிமடம், தா.பழூர், வி.கைகாட்டி பகுதிகளில் மழை
ஆண்டிமடம், தா.பழூர், வி.கைகாட்டி பகுதிகளில் மழை பெய்தது. இதன் காரணமாக ஆண்டிமடம் அருகே பழமையான அரசமரம் சாய்ந்தது.
ஆண்டிமடம்:
பலத்த மழை
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென பலத்த இடி மற்றும் காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலையோரம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் ஆண்டிமடம் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பக்கிரிமானியம் செல்லும் சாலையில் சானாங்குளம் அருகே சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று இருந்தது.
அரசமரம் சாய்ந்தது
நேற்று வீசிய காற்று மற்றும் மழையால் அந்த அரசமரம் சாலையின் குறுக்கே சாய்ந்து விழுந்தது. போக்குவரத்துக்கு இடையூறாக மரம் விழுந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர். இதையடுத்து ஆண்டிமடம் தாசில்தார் முத்துகிருஷ்ணன், ஊராட்சி தலைவர் ராஜாஜி ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டனர். மேலும் சாலையின் குறுக்கே கிடந்த அரசமரத்தை, மரம் அறுக்கும் எந்திரம் மூலம் ஆட்களை வைத்து அறுத்து அப்புறப்படுத்தினர். மேலும் மரம் விழுந்த நேரத்தில் அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
வி.கைகாட்டி, தா.பழூர்
வி.கைகாட்டியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் வி.கைகாட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் தா.பழூர் பகுதியில் நேற்று மாலை 3 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு ரம்மியமாக காட்சியளித்தது. குளிர்ந்த காற்று வீசியபோதும், வீடுகளுக்குள் கடும் வெப்பம் நிலவியது. இந்நிலையில் தா.பழூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் மாலை 4 மணி முதல் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக மின்சாரம் தடைபட்டது.
Related Tags :
Next Story