சேலம் மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு: கொரோனா தடுப்பூசி போடாததால் பொதுமக்கள் ஏமாற்றம்


சேலம் மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு: கொரோனா தடுப்பூசி போடாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 9 Jun 2021 2:35 AM IST (Updated: 9 Jun 2021 2:35 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக கொரோனா தடுப்பூசி போடாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சேலம்:
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக சேலம் மாவட்டத்தில் நேற்று தடுப்பூசி போடாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பினர்.
கொரோனா தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு 74 ஆயிரத்தை தாண்டியது. கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தற்போது கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தினமும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை சுமார் 3 லட்சத்து 91 ஆயிரம் பேர் வரை கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
பொதுமக்கள் ஏமாற்றம்
இதனிடையே கொரோனா தடுப்பூசி மருந்துகள் குறைவாக இருந்ததால் தடுப்பூசி போடும் மையங்கள் குறைக்கப்பட்டன. அதுவும் குறிப்பிட்ட வயதுடைய நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வந்தன. இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநகரம் மற்றும் புறநகரில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை.
ஆனால் இதுதெரியாமல் ஏராளமானவர்கள் தடுப்பூசி போடுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்தனர். அங்கிருந்த ஊழியர்களிடம் விவரங்கள் கேட்டறிந்த பின்னர் தடுப்பூசி போடாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சில மையங்களில் தடுப்பூசி போடப்படவில்லை என்பது குறித்த அறிவிப்புகள் ஒட்டப்பட்டிருந்தது. குறிப்பாக சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தடுப்பூசி போடாததால் ஆரம்ப சுகாதார நிலையம் வெறிச்சோடி காட்சி அளித்தது.
கொரோனா தடுப்பூசிகள் தட்டுப்பாடு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘கொரோனா தடுப்பூசி மருந்துகள் தட்டுப்பாட்டால் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மருந்துகள் வந்தவுடன் உடனடியாக மீண்டும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Next Story