மாவட்ட செய்திகள்

ஆடு, கோழிகளை விற்க முடியாமல் விவசாயிகள் அவதி + "||" + Farmers suffer

ஆடு, கோழிகளை விற்க முடியாமல் விவசாயிகள் அவதி

ஆடு, கோழிகளை விற்க முடியாமல் விவசாயிகள் அவதி
சந்தைக்கு அனுமதி இல்லாததால் கறம்பக்குடி பகுதியில் ஆடு, கோழிகளை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிபட்டு வருகின்றனர்.
கறம்பக்குடி, ஜூன்.10 -
சந்தைக்கு அனுமதி இல்லாததால் கறம்பக்குடி பகுதியில் ஆடு, கோழிகளை விற்க முடியாமல் விவசாயிகள் அவதிபட்டு வருகின்றனர்.
வாரச்சந்தை
கறம்பக்குடி தாலுகாவில் புதன்கிழமைதோறும் கறம்பக்குடியிலும், சனிக்கிழமை வெட்டன் விடுதியிலும் வாரச்சந்தை நடைபெறும். இங்கு நடைபெறும் ஆடு, கோழி, சந்தை பிரபலம். இதனால் வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆடு, கோழிகளை வாங்க வியாபாரிகள் கறம்பக்குடி வந்து செல்வர். ஆயிரக்கணக்கில் விற்பனை நடைபெறும். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் சந்தைகள் கூட அரசு தடை விதித்து உள்ளது.

இதையடுத்து கடந்த ஒரு மாதமாக கறம்பக்குடி, வெட்டன் விடுதி சந்தை நடைபெறவில்லை. இதனால் கறம்பக்குடி தாலுகா பகுதியில் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, கோழிகளை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆடு, கோழிகளை பருவத்தில் விற்றால் மட்டுமே நல்ல விலை கிடைக்கும்.
வாழ்வாதாரம் இழந்து...
ஏற்கனவே கோவில்திருவிழா மற்றும் கிடாவெட்டு பூஜைகள் ரத்துசெய்யபட்டதாலும், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு கட்டுபாடு விதிக்கப்பட்டதாலும், ஆடு, கோழிகள் வீடுகளில் தேங்கி உள்ளன. தொடர்ந்து சந்தையும் நடைபெறாததால் ஆடு, கோழி வளர்ப்போர் வாழ்வாதாரம் இழந்து திண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து வெட்டன் விடுதியைச் சேர்ந்த ஆடு வளர்க்கும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-
வானம் பார்த்த பூமியான கறம்பக்குடி பகுதியில் வறட்சி, மழை வெள்ளம், பருவம் தப்பிய மழை என விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனால் எங்கள் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயத்தோடு ஆடு, மாடு, கோழி வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சொற்பவிலைக்கே...
விவசாயம் கைகொடுக்காதபோது ஆடு, கோழிகளே எங்கள் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும். குடும்பத்தின் தேவைக்கு ஏற்ப ஆடு, கோழிகளை சந்தையில் விற்பனை செய்து குடும்ப செலவை சமாளிப்போம். ஆனால் தற்போது சந்தை கூடாத நிலையில் ஆடு, கோழிகளை விற்பனை செய்ய முடியவில்லை.
இறைச்சி வியாபாரிகளை தேடி சென்று விற்க முயன்றால் சொற்ப விலைக்கே வாங்குகின்றனர். இதனால் ஆடு, கோழி வளர்ப்போர் நஷ்டம் அடையும் நிலை உள்ளது. எனவே கட்டுபாட்டுடன், உள்ளூர் வியாபாரிகள் மட்டும் கலந்துகொள்ளும் வகையில் ஆடு, கோழிகளை விற்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.