அரசு பள்ளியில் முட்டை வாங்க திரண்ட மாணவர்கள்
கடுவனூர் அரசு பள்ளியில் முட்டை வாங்க மாணவர்கள் திரண்டதால் அங்கு ஊரடங்கு உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டது.
மூங்கில்துறைப்பட்டு,
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது கடுவனூர் கிராமம். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்படி, கடுவனூர் பள்ளியும் மூடப்பட்டிருந்தது.
இதனால் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்க முடியவில்லை. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி, பள்ளியில் அவர்களுக்கு சத்துணவு பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
காத்திருந்த மாணவர்கள்
இந்த நிலையில் கடுவனூர் பள்ளியில் முட்டை வழங்குவதாக மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 100-க்கணக்கான மாணவர்கள் ஒரே நேரத்தில் பள்ளியில் திரண்டனர். இதில் ஆர்வமிகுதியில் மாணவர்கள், சமூக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாக நின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும், முட்டை வழங்க சம்பந்தப்பட்ட சத்துணவு அமைப்பாளர் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு வரவில்லை. இதனால் மதியம் வரை பள்ளியில் மாணவர்கள் காத்திருந்தனர். இதை பார்த்த பெற்றோர்கள் சிலர், ஊரடங்கு காலத்தில் ஒரே நேரத்தில் பள்ளியில் அனைத்து மாணவர்களையும் இப்படி அழைப்பதை தவிர்த்து இருக்காலம்.
நடவடிக்கை
இப்படி ஒரே நேரத்தில் அழைத்ததன் மூலம் மாணவர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் மூலம் இங்கு ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்காமல் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். எனவே இனி வரும் காலங்களில் கொரோ னா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி மாணவர்களுக்கு தேவையான சத்துணவு பொருட்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புலம்பியதை காணமுடிந்தது. இதனிடையே காலதாமதமாக வந்த சத்துணவு அமைப்பாளர், அங்குள்ள மாணவர்களுக்கு முட்டைகளை வழங்கினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story