காட்டுயானை தாக்கி வாலிபர் பலி


காட்டுயானை தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 9 Jun 2021 5:43 PM GMT (Updated: 9 Jun 2021 5:44 PM GMT)

கோத்தகிரி அருகே காட்டுயானை தாக்கி வாலிபர் பலியானார்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே காட்டுயானை தாக்கி வாலிபர் பலியானார்.

கோவிலில் இருந்து வீடு திரும்பியபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கோவிலுக்கு சென்ற வாலிபர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள செம்மனாரை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ராஜ்குமார்(வயது 26). கூலி தொழிலாளியான இவருக்கு, இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ராஜ்குமார் தனது நண்பர்கள் சிலருடன் வீட்டில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் தாளமொக்கை கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு நடந்து சென்றார்.  பின்னர் அவர்கள் சாமி கும்பிட்டுவிட்டு இரவு 7 மணியளவில் தங்களது கிராமத்துக்கு நடந்து வந்து கொண்டு இருந்தனர். 

காட்டுயானை தாக்கி பலி

அப்போது திடீரென சாலையோர புதரில் இருந்து குட்டியுடன் காட்டுயானை ஒன்று வெளியே வந்தது. இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காட்டுயானை அவர்களை துரத்தியது. உடனே அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் காட்டுயானையிடம் ராஜ்குமார் சிக்கி கொண்டார். அவரை காட்டுயானை தாக்கி துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு காட்டுயானை அங்கிருந்து சென்றது.

இதுகுறித்து தப்பி ஓடிய அவரது நண்பர்கள் 3 பேரும், கோத்தகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனச்சரகர் சரவணன், வனவர் சக்திவேல் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ராஜ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நிவாரண தொகை

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், காட்டுயானை தாக்கி உயிரிழந்த ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரண தொகை வழங்க வேண்டும், காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி நீலகிரி மாவட்ட உதவி வன அலுவலர் சரவண குமார் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று, ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.50 ஆயிரம் வழங்கினர். 

மேலும் செம்மனாரை கிராமத்தில் சாலையோரம் வளர்ந்து உள்ள புதர்களை வெட்டி அகற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து உள்ளனர். மேலும் ஆளில்லாத குட்டி விமானம்(ட்ரோன்) மூலம் காட்டுயானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.


Next Story