மாவட்ட செய்திகள்

அரசின் நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது + "||" + Corona vulnerability has been reduced by government action

அரசின் நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது

அரசின் நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது
அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
கோவை

அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். 

அமைச்சர் ஆலோசனை

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன்  கோவை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

இதில் அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி, கலெக்டர் நாகராஜன், ஊரக வளர்ச்சி ஆணையாளர் பழனிசாமி, கூடுதல் இயக்குனர் அமித் குஸ்வானா உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா குறைந்து உள்ளது

முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு பொறுப் பேற்றதில் இருந்து ஒரு மாதமாக கொரோனா தொற்றை தடுப்பதில் இந்த அரசு முழு கவனம் செலுத்தி வருகின்றது. 

அரசின் நடவடிக்கை களால் தமிழகத்தில் கொரோனா குறைந்து உள்ளது. ஓரிரு வாரங்களில் கொரோனா இல்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிடும். 

கோவை ஊரக பகுதிகளில் தினசரி தொற்று 600 பேருக்கு மேல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு தினமும் 150 நபர்கள் என்ற அளவில் குறைந்து உள்ளது. 

கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளில் 3 லட்சத்து 41 ஆயிரத்து 447 குடியிருப்புகள் உள்ளன. 

இங்கு சளி, காய்ச்சல் குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட 100 வீடுகளுக்கு ஒருவர் என 3,414 அங்கன்வாடி, மகளிர் சுய உதவி குழுவினர் பணியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். 

அரசியலாக்க முயற்சி 

ஊரக பகுதிகளில் 2,860 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 95 ஆயிரத்து 800 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 

கிராம பகுதிகளில் 248 கையடக்க தெளிப்பான்கள், 238 மின் உபயோக தெளிப்பான்கள், 71 வாகனங்கள் மூலமும் கிருமிநாசினி தெளி க்கப்பட்டு வருகிறது. 

மேலும் 272 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்கள், 100 நடமாடும் வாகனங்கள் மூலம் மளிகை பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்பதால் சிலர் கொரோனா தொற்றை அரசியலாக்க முயல்கின்றனர். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடப்பவர் இல்லை.

 அவர் பதவி ஏற்ற 30 நாட்களுக்குள் இரு முறை கோவை வந்து ஆய்வு கூட்டங்கள் நடத்தி தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளார். 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

கோவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நிவாரண உதவிகள், நோய்த் தடுப்பு பணிகள் என அவர்களே நேரடியாக முயற்சிக்காமல் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். 

அரசியல் ஆதாயத்திற்காக குட்டையை குழப்பும் வேலையை செய்யக்கூடாது. 
தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகின்றேன் என்ற போர்வையில் மக்களுக்கு நெருக்கடியை அவர்கள் ஏற்படுத்த கூடாது.

 தற்போது யுத்த காலத்தில் இருப்பதால் கொரோனா தடுப்பு பணிகளில் மட்டும் கவனம் செலுத்தப்படுகின்றது. கோவை மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்றும், இறப்பு விகிதமும் குறையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிகிச்சை மையத்தில் ஆய்வு 

முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் சூலூர் கிட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள கொரோனா சிகிச்சை மையம் மற்றும் அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். 

மேலும் வீடு தோறும் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகளையும் அவர் பார்வையிட்டார். 

பின்னர் அவர் கணியூர் ஊராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப் பட்ட கொரோனா பரிசோதனை முகாமை ஆய்வு செய்ததுடன், தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.