நடுவட்டம் பகுதியில் வன நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதா?


நடுவட்டம் பகுதியில் வன நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதா?
x
தினத்தந்தி 10 Jun 2021 10:17 PM IST (Updated: 10 Jun 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக நடுவட்டம் பகுதியில் வன நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்று அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

கூடலூர்

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலியாக நடுவட்டம் பகுதியில் வன நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்று அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

ஐகோர்ட்டு உத்தரவு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட டி.ஆர். வனப்பகுதியை ஆக்கிரமித்து தங்கும் விடுதி கட்டுவதாக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை தலைமை நீதிபதி சஞ்ஜய் பானர்ஜி, நீதிபதிகள் செந்தில்குமார், ராமமூர்த்தி அடங்கிய முதன்மை அமர்வு விசாரணை நடத்தியது. பின்னர் வனப்பகுதியில் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க அனுமதிக்கக்கூடாது என கருத்து தெரிவித்தது.

மேலும் நீலகிரி மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் இணைந்து ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா? என்பதை 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

நில அளவை

இதன் எதிரொலியாக ஊட்டி தாசில்தார் குப்புராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினரும், நீலகிரி வனக்கோட்டத்தின் உதவி வன பாதுகாவலர் சரவணன் தலைமையிலான வனத்துறையினரும் நேற்று மதியம் 12 மணிக்கு டி.ஆர். வனப்பகுதியில் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்ற இடம் பட்டா நிலமா அல்லது வனத்துறைக்கு சொந்தமான நிலமா என அளவீடு செய்னர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனப்பகுதியின் எல்லையில் பாறைகளை அகற்றி சாலை அமைத்ததாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளோம். மேலும் கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டு உள்ளது.  வனப்பகுதி வழியாக அனுமதியின்றி பெறப்பட்ட மின் இணைப்பை உடனடியாக துண்டிக்க மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்றனர்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை

வருவாய்த்துறையினர் கூறுகையில், வனப்பகுதியில் நில அளவை செய்து மாவட்ட நிர்வாகம் மூலம் ஐகோர்ட்டுக்கு அறிக்கை அனுப்பப்பட உள்ளது. அதன்பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story