வனப்பகுதி மாணவர்களுக்கு அனைத்து வசதிகளையும் கல்வித்துறை செய்து கொடுக்கும்-அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
வனப்பகுதி மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்திற்கு வருவதற்கு அனைத்து வசதிகளையும் கல்வித்துறை செய்து கொடுக்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
வால்பாறை
வனப்பகுதி மாணவர் களுக்கு பள்ளிக்கூடத்திற்கு வருவதற்கு அனைத்து வசதிகளையும் கல்வித்துறை செய்து கொடுக்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
2-வது நாளாக அமைச்சர் ஆய்வு
கோவை மாவட்டம் வால்பாறைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் வந்தார். தொடர்ந்து வால்பாறை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அட்டகட்டி மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடங்களில் ஆய்வு நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸடேன்மோர், எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்கும் நல்லகாத்து எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வால்பாறை கக்கன்காலனியில் உள்ள ஆதிதிராவிடர் நல உண்டு உறைவிட பள்ளி மற்றும் ரொட்டிக்கடை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினார்.
பஸ் வசதி இல்லை
அப்போது, அமைச்சர் பள்ளிக்கூட வகுப்பறைகளுக்குள் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வந்து செல்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அதனை சரிசெய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் கேட்டார்.
அதற்கு ஆசிரியர்கள், வனப்பகுதியையொட்டி உள்ள எஸ்டேட் பகுதிகளில் இருந்து வரும் மாணவ-மாணவிகளுக்கு வனவிலங்குகள் அச்சுறுத்தலாக உள்ளது, மேலும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வந்து செல்ல போதிய பஸ் வசதிகள் இல்லை.
பள்ளிக்கூட கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் வகுப்பறைக்குள் தண்ணீர் வந்துவிடுகின்றன. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பி.எஸ்.என்.எல். சேவை சரிவர கிடைக்காததால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த முடியாத நிலை இருந்து வருகிறது என்று தெரிவித்தனர். இதனை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கப்படும்
இதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, மலைப்பிரதேசங்களில் உள்ளி பள்ளிக்கூடங்களின் நிலை மற்றும் மாணவ-மாணவிகளின் கல்வி குறித்தும் வால்பாறை பகுதியில் ஆய்வு செய்தேன். பள்ளிக்கூடங்களை விரைவாக திறக்க ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல பள்ளிக்கூட கட்டிடங்களை சீரமைக்க வேண்டும், பள்ளி மாணவ-மாணவிகள் வந்து செல்ல அனைத்து வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து, பள்ளிக்கூடத்திற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
வால்பாறை பகுதியில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு வந்து செல்வதற்கு தேவையான வசதிகளையும் பள்ளி கல்வித்துறை மூலம் செய்து கொடுக்கப்படும். மேலும் இந்த கோரிக்கைகள் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கப்படும். பின்னர் அவரது உத்தரவின்பேரில், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உடனிருந்தார்.
Related Tags :
Next Story