மாவட்ட செய்திகள்

நர்சுகளை பாதுகாப்பு இன்றி வாகனங்களில் அழைத்து செல்லும் அவலம் + "||" + nurse

நர்சுகளை பாதுகாப்பு இன்றி வாகனங்களில் அழைத்து செல்லும் அவலம்

நர்சுகளை பாதுகாப்பு இன்றி வாகனங்களில் அழைத்து செல்லும் அவலம்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் பணியாற்றுகிற செவிலியர்கள் வாகனங்களில் பாதுகாப்பு இன்றியும், சமூக இடைவெளி இன்றியும் அழைத்து செல்லப்படும் அவல நிலை திருப்பூரில் நடந்து வருகிறது.
திருப்பூர்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் பணியாற்றுகிற செவிலியர்கள் வாகனங்களில் பாதுகாப்பு இன்றியும், சமூக இடைவெளி இன்றியும் அழைத்து செல்லப்படும் அவல நிலை திருப்பூரில் நடந்து வருகிறது.
கொரோனா வார்டுகளில் பணியாற்றும் நர்சுகள்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த வாரம் உச்சத்தை தொட்டு வந்தது. இதன் பின்னர் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் பல மாவட்டங்களில் நாள் ஒன்றின் கொரோனா தொற்று 300-க்கும் கீழே இருந்து வருகிறது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில் ஒருநாள் பாதிப்பு 1000-ஐ நெருங்கியபடி உள்ளது.
இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்கள் பலரும் சிகிச்சை பெறுவதற்கு திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையுடன் கூடிய வார்டுகள் மற்றும் கொரோனா வார்டுகள் என தனித்தனியாக இருந்து வருகிறது. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 300-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நர்சுகள், டாக்டர்கள் என பலரும் பணியாற்றி வருகிறார்கள்.
பாதுகாப்பு இன்றி வாகனங்களில்...
தற்போது கொரோனா வார்டுகளில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பலர் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அவர்களுக்கு குறிப்பிட்ட நாட்கள் கொரோனா வார்டு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்கள் வரை கொரோனா வார்டுகளில் பணியாற்றுகிற அவர்கள் திருப்பூர் மாநகரில் உள்ள விடுதிகளில் தங்கவைக்கப்படுகிறார்கள். தொடர்ந்து அவர்களது பணி முடிந்ததும் மீண்டும் விடுதிகளுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.
இந்த கொரோனா வார்டு பணி முடிந்ததும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டுவிட்டு, பரிசோதனை முடிவு வந்த பின்னர் தான் செவிலியர்கள் மற்றும் நர்சுகள் வீடுகளுக்கு செல்வார்கள். இப்படிப்பட்ட இவர்களுக்கு எந்த வித வசதிகளும் மருத்துவமனை நிர்வாகம் செய்துகொடுக்கவில்லை என பலரும் புகார் தெரிவித்துள்ளனர். இதுபோல் பாதுகாப்பு இன்றி விடுதிகளில் இருந்து வாகனங்களில் செவிலியர்கள் அழைத்து செல்லப்படும் அவல நிலையும் இருந்து வருகிறது.
மன உளைச்சல்
இது குறித்து செவிலியர்கள் கூறியதாவது:-
திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டுகளில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் 3 ஷிப்ட் முறையில் தற்போது பணியாற்றி வருகிறோம். ஒவ்வொரு ஷிப்ட் முடியும் போதும் அரசு மருத்துவனைகளில் இருந்து செவிலியர்கள், டாக்டர்கள் விடுதிகளுக்கு வாகனங்களில் அழைத்து செல்லப்படுவார்கள். பிறகு விடுதிகளில் அடுத்த ஷிப்டிற்காக காத்திருப்பவர்கள் பின்னர் வாகனங்களில் அழைத்து செல்லப்படுவார்கள். இதற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் குறைவான இருக்கைகளே இருக்கின்றன. இதனால் பலர் இருக்கையின்றி நின்று கொண்டு பாதுகாப்பற்ற முறையிலும், சமூக இடைவெளியின்றியும் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஜன்னல் இல்லாத வாகனம் என்பதால் பின் கதவை திறந்து வைக்கும் அபாயம் உள்ளது.
இதுபோல் விடுதிகளில் வழங்கப்படும் உணவுகளும் கடந்த காலங்களில் கொரோனா பாதிப்பின் போது வழங்கப்பட்டது போல் வழங்கப்படுவதில்லை. இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதலாக வாகனங்கள் ஏற்பாடு செய்து, பாதுகாப்புடன் அழைத்து செல்ல வேண்டும். கடந்த காலங்களை போல் உணவுகளும் தரமானதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே குடும்பத்தை பிரிந்து கடுமையான சூழலில் பணியாற்றி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்கள் மேலும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.