குரோம்பேட்டையில் பரிதாபம் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது குழந்தை பலி
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது குழந்தை பலியான சம்பவம் குரோம்பேட்டையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை அம்பேத்கர் நகர் வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். சலவை தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி. இவர்களுடைய மகள் கயல்விழி(வயது 6).
இந்த தம்பதிக்கு 4 வயதில் சர்வேஷ் என்ற மகன் இருந்தான். நேற்று காலை சர்வேஷ், தனது வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டு இருந்தான். அவனது பெற்றோர் வீட்டின் உள்ளே இருந்தனர்.
சிறிதுநேரம் கழித்து அவனது பெற்றோர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த தங்களது மகன் சர்வேஷ், மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கம் என பல இடங்களில் தேடியும் அவன் கிடைக்கவில்லை.
பின்னர் வீட்டின் முன்புறம் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியின் மேல் மூடப்பட்டிருந்த பலகை சற்று விலகி இருந்ததால், சந்தேகத்தின்பேரில் பலகையை எடுத்து பார்த்தபோது தண்ணீர் தொட்டிக்குள் சர்வேஷ் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே குழந்தையை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை சர்வேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை சர்வேஷ், எதிர்பாராதவிதமாக தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியாகி இருப்பது தெரிந்தது. இது குறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story