10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு; அமைச்சர் இ.பெரியசாமி பேட்டி


10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு; அமைச்சர் இ.பெரியசாமி பேட்டி
x
தினத்தந்தி 11 Jun 2021 8:12 PM IST (Updated: 11 Jun 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதில் தொடர்புடையவர்கள் மீது விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல்:
10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இதில் தொடர்புடையவர்கள் மீது விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
முறைகேடு புகார்
கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் 4 ஆயிரத்து 451 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் உறுப்பினர்களுக்கு கடன் வழங்கியது, நகைகளை அடமானம் வைத்து கடன் வழங்கியது மற்றும் அந்த கடன்களை தள்ளுபடி செய்தது போன்ற பல்வேறு பரிவர்த்தனைகள் முறையாக நடைபெறவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது என்று எனக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் முறைகேடுகள் நடந்தது நிரூபிக்கப்பட்டால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் களைந்து கூட்டுறவு வங்கிகளின் அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படை தன்மையுடன் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளப்படும்.
தவறான தகவல்
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டன. வங்கிகளில் விவசாய கடன்களை எத்தனை பேர் வாங்கியுள்ளனர். கடன் தள்ளுபடி விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளம் மூலம் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கம்ப்யூட்டர்கள் மூலம் பரிவர்த்தனை நடக்கலாம்.
ஆனால் அந்த வங்கிகளில் உள்ள கம்ப்யூட்டர்கள் அனைத்தும் மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்படவில்லை. அவ்வாறு இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இணையதளம் மூலம் நாம் தகவல்களை பெற முடியும். எனவே நவீன விஞ்ஞானி என்று மக்களால் அழைக்கப்படும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தவறான தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், எனக்கு இந்த துறை குறித்து எதுவும் தெரியாது. நான் இந்த துறையை விருப்பம் இல்லாமல் கவனித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி பாதைக்கு...
அதில் உண்மை இல்லை. எனக்கு இந்த துறையில் ஏற்கனவே அனுபவம் உள்ளது. தி.மு.க. ஆட்சி காலத்தில் எனக்கு பல்வேறு துறைகள் வழங்கப்பட்டுள்ளது. அதே போல் தான் தற்போது கூட்டுறவு துறை வழங்கப்பட்டுள்ளது. இந்த துறை நான் விரும்பி ஏற்றுக்கொண்ட துறை ஆகும். மேலும் இந்த துறையில் நடந்த முறைகேடுகளை களைந்து கூட்டுறவு துறையை சிறந்த துறையாக மாற்றுவேன். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பல்வேறு வகை கடன் வழங்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அந்த காலகட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன் வழங்க போதுமான நிதி இல்லை. பிறகு எப்படி கடன் வழங்கி இருக்க முடியும். கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடமானம் வைக்காமலேயே அவற்றை அடகு வைத்து கடன் வழங்கியதாகவும், பின்னர் அந்த கடன் தள்ளுபடி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. அதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
நடவடிக்கை
இதுதவிர கூட்டுறவு வங்கி தலைவர்கள் முறைகேடான முறையில் தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு இந்த புகார் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக கூட்டுறவு வங்கிகளில் புதிய உறுப்பினர்கள் யாரும் சேர்க்கப்படவில்லை. தற்போது புதிய உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் நகை கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Next Story