மருந்து கடைகளில் சிகிச்சை அளித்தால் உரிமம் ரத்து; கலெக்டர் சமீரன் எச்சரிக்கை


மருந்து கடைகளில் சிகிச்சை அளித்தால் உரிமம் ரத்து; கலெக்டர் சமீரன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2021 8:30 PM GMT (Updated: 11 Jun 2021 8:30 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் மருந்து கடைகளில் சிகிச்சை அளித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் சமீரன் எச்சரித்துள்ளார்.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மருந்து கடைகளில் சிகிச்சை அளித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் சமீரன் எச்சரித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம் 

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தனியார் மருந்தகங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார்
சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் நெடுமாறன், துணை இயக்குனர் டாக்டர் அருணா, மருந்து ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் தென்காசி மாவட்ட மருந்து கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சமீரன் பேசியதாவது:-

ஆக்சிஜன் அளவு பரிசோதனை

மருந்து கடைகளில் மருந்து வாங்க வருபவர்களுக்கு டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல், காய்ச்சல் தொடர்பான மருந்துகளை நோயாளிகளிடம் வினியோகிக்க கூடாது. காய்ச்சல் தொடர்பாக வரும் நோயாளிகளின் தகவல்களை சுகாதாரத்துறை அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும்.
மருந்து வாங்க வரும் நோயாளிகளுக்கு காய்ச்சல் அறிகுறி ஏதேனும் தென்பட்டால், ஆக்சிஜன் அளவை அறிந்து கொள்ளும் வகையில், பல்ஸ் ஆக்சியோ கருவியினை வைத்து இலவசமாக ஆக்சிஜன் அளவை பரிசோதிக்க வேண்டும்.
உரிமம் ரத்து
காய்ச்சல் தொடர்பான மருந்துகளை நோயாளிகளிடம் வழங்கும் தகவல்களை சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தினந்தோறும் பதிவிட வேண்டும். மருந்து கடைகளில் டாக்டர்களின் பெயர்களை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கக்கூடாது.
யாரேனும் மருத்துவர்களின் பெயரை குறிப்பிட்டு சிகிச்சை அளிக்கப்படுவது தெரிய வந்தால் மருந்தகங்களின் உரிமை ரத்து செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி அமைப்பின் சார்பில், ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் மண்டல மேலாளர்கள் வழங்கினா்.

Next Story