அரியலூர் மாவட்டத்தில் சலூன், டீக்கடைகள், டாஸ்மாக் கடைகள் திறப்பு


அரியலூர் மாவட்டத்தில் சலூன், டீக்கடைகள், டாஸ்மாக் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 14 Jun 2021 8:24 PM GMT (Updated: 14 Jun 2021 8:24 PM GMT)

ஊரடங்கு தளர்வுகளின்படி அரியலூர் மாவட்டத்தில் சலூன், டீக்கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

அரியலூர்:

ஊரடங்கில் தளர்வுகள்
கொரோனா பரவல் 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. பின்னர் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மேலும் தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதில் சலூன், டாஸ்மாக் கடைகள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதன்படி அரியலூர் மாவட்டத்தில் நேற்று டாஸ்மாக் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டன. இதில் அரியலூர் நகரில் சலூன்கள், டீக்கடைகள், டாஸ்மாக் கடைகள், இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைகள் உள்பட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டிருந்தன. டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புக்கட்டைகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் மதுப்பிரியர்கள் நிற்க வைக்கப்பட்டு முககவசம் அணிந்து வரிசையில் சென்று மதுபாட்டில்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனர். நகரில் உள்ள 6 கடைகளிலும் காலை 10 மணி முதலே மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. போலீசார் மற்றும் விற்பனையாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
டீக்கடைகளில் பார்சல் சேவை
நகரில் உள்ள டீக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அந்த கடைகளில் பார்சல் டீ மட்டும் வழங்கப்பட்டது. டீக்கடைகள் முன்பு நின்று யாரும் டீ, காபி குடிக்க அனுமதிக்கப்படவில்லை. சலூன் கடைகள் திறக்கப்பட்டு, முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களது பணிகளை தொடங்கினர். சிகையலங்காரம் செய்து கொள்ள வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும், முடிதிருத்தும் தொழிலாளர்களும் முககவசம் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.
நகரில் ஜவுளி, நகை, பாத்திரக் கடைகள் திறக்கப்படவில்லை. பஸ்கள் ஓடாததால் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. நேற்று முகூர்த்த நாள் என்பதால் ஒரு சில கோவில்களில் 50 பேர் மட்டும் கலந்து கொண்ட திருமணங்கள் நடந்தன.
தாமரைகுளம், மீன்சுருட்டி
தாமரைகுளம் பகுதியில் முடிதிருத்தும் கடைகள் திறக்கப்பட்டதையடுத்து, இளைஞர்கள் உள்ளிட்ட பலர் வந்து சிகையலங்காரம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியதாகவும், எனவே தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் முடிதிருத்துவோர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன்சுருட்டி பகுதியில் நேற்று சலூன் கடைகள், டீக்கடைகள் திறக்கப்பட்டன. மீன்சுருட்டி பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளும் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 10 மணியளவில் திறக்கப்பட்டன. ஆனால் காலை 7 மணி முதலே காத்திருந்த மதுபிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விக்கிரமங்கலம்
விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள முத்துவாஞ்சேரி, சாத்தாம்பாடி, கோவிந்தபுத்தூர், ஸ்ரீபுரந்தான் ஆகிய பகுதிகளில் நேற்று காலை டீக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் மற்றும் இரும்பு ெபாருட்கள் விற்கும் கடைகள், சலூன் கடைகளும் திறந்திருந்தன. விக்கிரமங்கலம் அருகே புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று காலை முதலே மதுப்பிரியர்கள் வரிசையில் மது வாங்க காத்திருந்தனர். கடை திறக்கப்பட்ட உடன் மதுப்பிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். இதனால் மதியத்திற்கு உள்ளாகவே கடையில் இருந்த அனைத்து மதுபானங்களும் விற்றுத்தீர்ந்து விட்டன. பின்னர் வந்த மதுப்பிரியர்களுக்கு மது இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியது.
தா.பழூர்
தா.பழூரில் 2 டாஸ்மாக் கடைகளும், கோட்டியால் பாண்டிபஜாரில் ஒரு டாஸ்மாக் கடையும், கோடாலி கிராமத்தில் ஒரு டாஸ்மாக் கடையும் நேற்று திறக்கப்பட்டன. அந்த கடைகள் முன்பு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. காலை 8 மணி முதலே அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு மதுப்பிரியர்கள் குவிய தொடங்கினர். மது விற்பனை தொடங்கியபோது, கடை மேற்பார்வையாளர் மது பிரியர்களிடம் ஒலிபெருக்கி மூலம் ஒரு நபருக்கு 3 மது பாட்டில்கள் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால் அதிக அளவு மதுபான பாட்டில்கள் வாங்கிச்செல்லலாம் என்று வந்திருந்தவர்கள், அவர்களது நண்பர்களுக்கும் செல்போன் மூலம் தகவல் கொடுத்து மதுபான கடைக்கு வர அழைப்பு விடுத்தனர். இதனால் தா.பழூரில் உள்ள 2 கடைகளிலும் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு மது பிரியர்கள் வரிசையாக நின்றனர். மதுக்கடை அருகே தடுப்பு அமைந்திருந்த இடத்தில் மட்டும் சமூக இடைவெளி கடைபிடித்தனர்.
தடுப்பு அரணுக்கு சற்று தொலைவில் நின்றவர்கள் சமூக இடைவெளியை பற்றி கவலைப்படாமல் ஒருவரோடு ஒருவர் உரசிக்கொண்டு நின்றனர். கோட்டியால் பாண்டிபஜார் கடையில் முற்றிலுமாக சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. மேலும் அங்கு ஒரே ஒரு ஊர்க்காவல் படை வீரர் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் சொன்னதை எந்த மதுப்பிரியரும் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. தஞ்சை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் தா.பழூர் கடைக்கு மதனத்தூர் கிராமம் வழியாகவும், கோடாலி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தஞ்சை மாவட்டத்தின் அணைக்கரை, திருப்பனந்தாள் பகுதிகளிலும் இருந்து அதிக அளவு மதுப்பிரியர்கள் வந்திருந்தனர்.

Next Story