அரசு ஊழியர் வீட்டில் மோட்டார் சைக்கிள்- கட்டில், மேஜைக்கு தீ வைப்பு
ஜெயங்கொண்டத்தில் அரசு ஊழியர் வீட்டில் மின்மோட்டாரை திருடிவிட்டு மோட்டார் சைக்கிள், கட்டில், மேஜைக்கு தீ வைத்து கொளுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்:
தீ வைத்து கொளுத்தினர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தீரன் நகரில் வசிப்பவர் சங்கர்(வயது 45). இவர் செந்துறை கல்வி மாவட்ட ஆண்டிடம் வட்டார வளமைய மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி கலைமணி(42). இவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நள்ளிரவில் சங்கரின் வீட்டின் முன்பகுதியில் புகுந்த மர்ம நபர்கள், தொட்டியில் தண்ணீர் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரை திருடிக்கொண்டு, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த புதிய மோட்டார் சைக்கிள் மற்றும் அப்பகுதியில் இருந்த கட்டில், உணவருந்தும் மேஜை உள்பட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை தீ வைத்து கொளுத்திவிட்டு சென்றனர். இதனால் வீட்டில் உள்ள மின்சார இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு எரிந்து நாசமாகின.
குழாய்கள் உடைப்பு- பெட்ரோல் திருட்டு
இதேபோல் அருகில் உள்ள வீட்டில் இருந்த மின் மோட்டாரை கழற்ற முடியாததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் மோட்டாரையும், குழாய்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி சென்றனர். மேலும் மற்றொருவர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து பெட்ரோலை திருடிச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நள்ளிரவில் வீட்டிற்கு வெளியே ஏதோ வெடிப்பது போன்ற சத்தம் கேட்டு கண்விழித்த சங்கர், கலைமணி ஆகியோர் வெளியில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மற்றும் பொருட்கள் எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள், தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து தீயை போராடி அணைத்துள்ளனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது உள்ளிட்ட போதை வஸ்துகளை உபயோகித்து இருப்பவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் முன்விரோதம் காரணமாக எவரேனும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் ேபாலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி, மர்ம நபர்களை வலைவீசி ேதடி வருகின்றனர்.
Related Tags :
Next Story