வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் வாழை, தக்காளி பயிர்களை சேதப்படுத்தின


வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் வாழை, தக்காளி பயிர்களை சேதப்படுத்தின
x
தினத்தந்தி 17 Jun 2021 5:39 AM IST (Updated: 17 Jun 2021 5:39 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலங்களில் புகுந்து யானைகள் அட்டகாசம் வாழை, தக்காளி பயிர்களை சேதப்படுத்தின

வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் வாழை, தக்காளி பயிர்களை சேதப்படுத்தின. 
காட்டு யானைகள்
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள சிகரமாகனப்பள்ளி கிராமமானது தமிழக- கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வாழை, பப்பாளி, தக்காளி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இந்தநிலையில் கடந்த சில தினங்களாக 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சிகரமாகனப்பள்ளி கிராமத்திற்கு வந்து சென்றது.
இதற்கிடையே நேற்று அதிகாலை 10-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் சிகரமானப்பள்ளி கிராமத்துக்கு வந்தனர். பின்னர் அந்த யானைகள் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின. 
வனத்துறையினர் மெத்தனம் 
இதில் சத்திஷ் என்பவரது விவசாய நிலத்தில் 500-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும், ராதாகிருஷ்ணன் என்பவரது நிலத்தில் 1 ஏக்கர் தக்காளி செடிகளையும் யானைகள் சேதப்படுத்தின. மேலும் கிராமத்தை சுற்றியுள்ள விவசாயிகள் நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் தென்னை, பப்பாளி மரங்களை சேதப்படுத்தியதுடன், தண்ணீர் குழாய்களை உடைத்து அட்டகாசம் செய்து விட்டு அங்கிருந்து சென்றது.
இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர் என்றனர். காட்டு யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் இடையே அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.
====

Next Story