கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு


கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 18 Jun 2021 2:00 AM IST (Updated: 18 Jun 2021 2:00 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

மைசூரு:நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 

தொடர் மழை

கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
 அதுபோல் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் எனும் கே.ஆர்.எஸ். அணை, மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

கே.ஆர்.எஸ். அணை

தொடர் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 85.68 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10,187 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. அதுபோல் அணையில் இருந்து 375 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கே.ஆர்.எஸ். அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 6,379 கனஅடி நீர் வந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல் கடல்மட்டத்தில் இருந்து 2,284.80 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்ட 2,269.09 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 13 ஆயிரத்து 22 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story