மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவை கலைத்த தொழிலாளி
3-வதும் பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிந்ததால், வீட்டில் வைத்தே மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவை தொழிலாளி கலைத்த கொடூர சம்பவம் விஜயாப்புராவில் நடந்து உள்ளது.
விஜயாப்புரா: 3-வதும் பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்று தெரிந்ததால், வீட்டில் வைத்தே மனைவியின் வயிற்றை கத்தியால் அறுத்து கருவை தொழிலாளி கலைத்த கொடூர சம்பவம் விஜயாப்புராவில் நடந்து உள்ளது.
3-வதும் பெண் குழந்தை
விஜயாப்புரா அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த். தொழிலாளி. இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் விஜயலட்சுமி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இந்த முறை தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று உறவினர்களிடம், அரவிந்த் கூறி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவியின் வயிற்றில் என்ன குழந்தை வளர்கிறது என்பதை பற்றி அறிய அவரை ஸ்கேன் சென்டருக்கு அரவிந்த் அழைத்து சென்று உள்ளார்.
அங்கு ஸ்கேன் எடுத்து பார்த்த போது விஜயலட்சுமியின் வயிற்றில் வளருவது பெண் குழந்தை என்று தெரியவந்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த், விஜயலட்சுமியிடம் வயிற்றில் வளரும் கருவை கலைத்து விடும்படி கூறியதாக தெரிகிறது. ஆனால் இதற்கு விஜயலட்சுமி மறுத்து விட்டதாக தெரிகிறது.
கருக்கலைப்பு
இந்த நிலையில் நேற்று முன்தினம் விஜயலட்சுமி வீட்டில் இருந்தார். அப்போது வீட்டிற்கு 2 பேரை அரவிந்த் அழைத்து உள்ளார். பின்னர் 3 பேரும் சேர்ந்து விஜயலட்சுமிக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்ய முயன்று உள்ளனர். இதற்கு விஜயலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனாலும் விஜயலட்சுமியின் வயிற்றை கத்தியால் அறுத்து அரவிந்த் உள்பட 3 பேரும் சேர்ந்து கருவை கலைத்து உள்ளனர்.
இதனால் விஜயலட்சுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அரவிந்த் உள்பட 3 பேரும் தப்பி சென்றனர். உயிருக்கு போராடிய விஜயலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் விஜயாப்புரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட அரவிந்த் உள்பட 3 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். வயிற்றில் இருப்பது என்ன குழந்தை என்று கூறுவது சட்டப்படி குற்றமாகும். ஆனால் விஜயலட்சுமியின் வயிற்றில் இருந்த குழந்தையை பற்றி கூறிய ஸ்கேன் சென்டரிலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story