வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி 4 குட்டிகளை ஈன்றது


வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி 4 குட்டிகளை ஈன்றது
x
தினத்தந்தி 18 Jun 2021 10:00 AM IST (Updated: 18 Jun 2021 10:00 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் வெள்ளைப்புலி சில நாட்களுக்கு முன்பு 4 அழகான குட்டிகளை ஈன்றது.

புதிதாக குட்டி ஈன்ற தாய் மற்றும் 4 புலிக்குட்டிகளை தனியாக ஒரு கூண்டில் அடைத்து பூங்கா டாக்டர்கள் சிறப்பு கவனம் செலுத்தி பராமரித்து வந்தனர்.
தாய்ப்புலி ஆத்திரத்தில் தனக்கு பிறந்த ஒரு குட்டியை முன்னங்காலால் தாக்கியதில் அந்த புலிக்குட்டிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. பூங்கா டாக்டர்கள் அந்த புலிக்குட்டியை மீட்டு பூங்கா வளாகத்தில் உள்ள பச்சிளம் குட்டிகளை பராமரிக்கும் மையத்தில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் புலிக்குட்டி நலமுடன் உள்ளது. குட்டி ஈன்றுள்ள தாய்ப்புலிக்கு வழக்கமாக தினந்தோறும் வழங்கப்படும் 7 கிலோ மாட்டிறைச்சி, 4 கிலோ கோழி இறைச்சி அளிக்கப்படுகிறது. தாய் மற்றும் குட்டிகளின் உடல் நிலையை தொடர்ந்து மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

வெள்ளைப்புலி கருத்தரித்த 101 நாட்கள் முதல் 105 நாட்களில் குட்டிகளை ஈனும், பிறந்த புலிக்குட்டிகள் 11 முதல் 13 நாட்களில் கண் திறக்கும், பிறந்தது முதல் தாய்ப்பாலை மட்டுமே உணவாக உட்கொள்ளும், 3 மாதங்களுக்கு பிறகு தான் புலிக்குட்டிகள் இறைச்சி உண்ண தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story