காய்கறிகளை எட்டி உதைத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்


காய்கறிகளை எட்டி உதைத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 20 Jun 2021 8:42 PM GMT (Updated: 20 Jun 2021 8:42 PM GMT)

காய்கறி கூடைகளை எட்டி உதைத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

பெங்களூரு:கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. வார இறுதி நாளான நேற்று கர்நாடகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் ராய்ச்சூர் டவுன் காடேபஜார் போலீஸ் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் அஜாம் தலைமையில் போலீசார் சந்திரமல்லேஷ்வர் சர்க்கிளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ஏராளமான நடைபாதை காய்கறி கடைகள் திறந்து இருந்தன. 

இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த அஜாம் அந்த கடைகளுக்கு சென்று காய்கறிகளை காலால் எட்டி உதைத்தார். மேலும் வியாபாரிகளை தடியாலும் அடிக்க முயன்றார். பின்னர் வியாபாரிகளை அங்கிருந்து எச்சரித்து அனுப்பினார். இதற்கிடையே அஜாம் காய்கறிகளை காலால் எட்டி உதைப்பதை யாரோ வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். 

அந்த வீடியோ தற்போது வைரலானது. இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் அஜாமை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

Next Story