கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி மூலம் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி மூலம் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2021 7:08 PM GMT (Updated: 21 Jun 2021 7:08 PM GMT)

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் காணொலிக்காட்சி மூலம் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில், வீட்டில் இருந்தே பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

கரூர்
குறைதீர்க்கும் நாள் கூட்டம் 
கொரோனா பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் நலன் கருதி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை காணொலிக்காட்சி மூலம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். 
கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும், வாலிபர்களும் வீட்டில் இருந்தபடியே ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் பகுதிக்கான கோரிக்கைகளையும், தனிநபர் கோரிக்கைகளையும் கலெக்டரிடம் காணொலிக்காட்சி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். ஒவ்வொருவரின் கோரிக்கைக்கும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களே காணொலியில் வந்து பதிலளித்தது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றது. 
அலுவலர்களுக்கு உத்தரவு
அனைவரின் கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்த கலெக்டர், 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ள கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நிறைவேற்றிவிட்டு அதற்கான அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டு என உத்தரவிட்டார். 
காலை 11 மணிக்குத் தொடங்கிய கூட்டம் மதியம் 2 மணிவரை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 51 பேர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷாஜகான், தேசிய தகவலியல் அலுவலர் கண்ணன், சமூகப்பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் சைபுதீன், ஆதிதிராவிடர் நல அலுவலர் சந்தியா உள்ளிட்ட பலர் காணொலிக்காட்சி வாயிலாக கலந்துகொண்டனர்.
கலெக்டர் பேட்டி
பின்னர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நிருபர்களிடம் கூறுகையில், காணொலிக்காட்சி மூலம் நடைபெற்ற கூட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தேசிய தகவல் மையத்தின் சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் BharatVC என்ற செயலியின் மூலம் இக்கூட்டம் நடத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் இக்கூட்டத்தை மேலும், விரிவுபடுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கொரோனா தொற்று முழுவதும் குறைந்து குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பொதுமக்கள் நேரில் வந்து மனு அளிக்கலாம் என்ற உத்தரவு வரும் வரை இனிவரும் காலங்களில் திங்கட்கிழமைதோறும் காணொலிக்காட்சி மூலமாகவே குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story